ஆண்களைவிட பெண்களுக்கு தாமதமாக மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?

ஆண்களைவிட பெண்களுக்கு தாமதமாக மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?
Updated on
1 min read

லண்டன்

நாடு வித்தியாசம் இல்லாமல், உலகளாவிய அளவிலே ஆண்களை விடத் தாமதமாகவே பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றன. ஆண், பெண்ணை ஒப்பிடுகையில் ஆணுக்கு ஏற்பட்ட பிறகு சராசரியாக சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு பெண்களுக்கு நோய் வருகிறது. இதற்கு, பெண்களுக்குச் சுரக்கும் ஹார்மோன்களே காரணம் என்று கெண்டக்கி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கொழுப்பை உறிஞ்சும் எக்ஸ்எக்ஸ் ஹார்மோன்கள் இருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இதயத்தைக் காப்பவை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எக்ஸ் க்ரோமோசோம் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

எக்ஸ் க்ரோமோசோம்கள், ரத்தத்தில் சுற்றிவரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் தமனிகள் விரிவடைய முடியாமல் போகிறது. இதுவே இதயம் சம்பந்தமான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இதுகுறித்து லண்டன் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாள லிசா கேஸி கூறும்போது, ''உணவில் இருந்து கிரகிப்படும் கொழுப்பு அமிலங்களின் அளவைக் கணக்கிட்டோம். எக்ஸ் க்ரோமோசோம்கள் எப்படி, ரத்தம் மற்றும் தமனியில் உள்ள கொழுப்பு அமிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கவனித்தோம்.

அதில் எங்களுக்குக் கிடைத்த முடிவு, எக்ஸ்எக்ஸ் செக்ஸ் க்ரோமோசோம் சேர்க்கை. அதன்மூலம் கொழுப்பு உரிய முறையில் பயன்படுத்தப்பட்டது. குழந்தைகளைக் கருவில் தாங்கவும் தாய்ப்பால் கொடுக்கவும் கொழுப்புச்சத்து பெண்களுக்குத் தேவை. மாதாந்திரத் தொந்தரவுகளின்போதும் கொழுப்புச் சக்தி எரிக்கப்படுகிறது.

எக்ஸ்எக்ஸ் செக்ஸ் க்ரோமோசோம்கள் மூலம் கொழுப்பு அமிலம் முழுமையாக உறிஞ்சப்படுகிறது. இதை முதலில் எலியைக் கொண்டு பரிசோதனை செய்தோம். அதில் நல்ல முடிவு கிடைத்தது. இதனாலேயே பெண்களுக்கு தாமதமாக இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இவை எல்லாமே சரியாக, முறையாக போய்க்கொண்டிருக்கும். ஆனால் பெண்கள் மெனோபாஸ் நிலையை அடையும்போது, சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் மெதுவாகக் குறையத் தொடங்கும்.

இதனால் பெண்கள் அதிகக் கொழுப்பை எடுத்துக்கொள்பவர்களாக இருந்தால், மெனோபாஸுக்குப் பிறகு அவர்கள் உட்கொள்ளும் கொழுப்பின் அளவு குறித்துக் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்கிறார் லிசா கேஸி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in