

ஆகஸ்ட் 4-ல் எலும்பு மற்றும் மூட்டு தினம்
யாருக்காவது கோபம் வந்தால் ‘உன் எலும்பை எண்ணிவிடுவேன்’ என்பார்கள். அதாவது, எலும்பை முறித்துவிடுவார்களாம். உண்மையில், எலும்பு மிக வலுவானது. எனினும், வயது உள்ளிட்ட காரணங்களால் எலும்புகள் தேயும்போது, பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, எலும்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்கின்றனர் எலும்பு மருத்துவர்கள்.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதியை எலும்பு மற்றும் மூட்டு தினமாக அனுசரிக்கின்றனர். இதையொட்டி, ஒரு வாரத்துக்கு மக்களிடம் எலும்பு தேய்மானம், அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பாண்டில் நடைபெற உள்ள எலும்பு மற்றும் மூட்டு தின நிகழ்ச்சிகள் குறித்து தமிழ்நாடு எலும்பியல் சங்கத் தலைவர் தீனதயாளன், நிர்வாகிகள் திருமலைசாமி, சுந்தரராஜன், கோவை எலும்பியல் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலர் தனசேகர் ராஜா ஆகியோரிடம் பேசினோம்.
“நடப்பாண்டில் `வலுவான எலும்புகளுடன் வளமான முதுமை’ என்ற தலைப்பில் எலும்பு தினத்தை அனுசரிக்கிறோம். இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தேசிய எலும்பியல் சங்கத்தின் ஒவ்வோர் உறுப்பினரும், ஓர் ஏழை நோயாளிக்கு இலவசமாக எலும்பு அறுவைசிகிச்சை மேற்கொள்வர். நவீன மருத்துவ வசதிகளால் இந்தியர்களின் சராசரி வயது தற்போது 69. இது 2025-ல் 71-ஆகவும், 2050-ல் 77-ஆகவும் உயரும்.
அதேசமயம், வயதுக்கான நோய்களும் அதிகரிக்கும். குறிப்பாக, எலும்புகள் மற்றும் மூட்டுகள் தேய்மானம் அடைந்து, கடும் வலி ஏற்படும். இந்தியாவில் 55 வயதுக்கு மேல் உள்ள ஒரு லட்சம் பேரில் 163 பெண்களுக்கும், 121 ஆண்களுக்கும் அதிக அளவில் மூட்டுத் தேய்மானம் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் பருமன், சரியான உடற்பயிற்சி இல்லாதது, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றால் எலும்பு தேய்மானம் அதிகரிக்கிறது. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதையொட்டி, வயதானவர்களுக்கு இலவசமாக எலும்பு தாது அடர்த்தி சோதனை செய்ய உள்ளோம். மேலும், விழிப்புணர்வுப் பிரச்சாரம், பேரணி உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளப்படும்” என்றனர்