Published : 16 Jul 2019 13:12 pm

Updated : 16 Jul 2019 14:49 pm

 

Published : 16 Jul 2019 01:12 PM
Last Updated : 16 Jul 2019 02:49 PM

’ஆடலாம், ஓடலாம்’; ’நாப்கின்’ விளம்பரங்கள் உண்மைதானா? 

napkin

 - ஜெமினி தனா
 
நாப்கின்... இதற்கும் உடல் தெம்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதானே உண்மை. ஆனால், ஏதோ ‘இந்த நாப்கின்கள் பயன்படுத்தினால், ஆடலாம், ஓடலாம், ஜெயிக்கலாம்’ என்று வரும் விளம்பரங்கள், நம் மூளையை மழுங்கடித்து, ஏமாற்றுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். 
அந்த மூன்று நாட்கள் அவஸ்தை, அந்தக் காலத்தில் இலைமறை காயாக இருந்தன. ஆனால் இன்றைக்கு, கூவிக்குவி தெரிவிக்கின்றன நாப்கின் விளம்பரங்கள். எங்களது தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் ஆடலாம், ஓடலாம், பாடலாம், குதிக்கலாம், விளையாடலாம்... என்பதான விளம்பரங்களின் ஈர்ப்பு, நிச்சயமாக உடலுக்கு நன்மை பயக்காது என்கிறார்கள் மருத்துவர்கள். 
அந்த மூன்று நாட்கள்:
பருவவயதை எட்டிய பெண்கள் மாதந்தோறும் மாதவிடாய் நாட்களை சந்திக்கிறார்கள்.  பெரும்பாலான பெண்கள் சங்கடத்துடனும், வலியுடனும், ஒருவித அவஸ்தையுடனும் இந்தநாட்களைக் கழிக்கிறார்கள் என்பதே நிஜம். இந்த தருணங்களில், அனைத்து பெண்களுக்குமே ஒருவிதமான எரிச்சலையும், மன உளைச்சலையும் அசௌகரியத்தையும் அயர்ச்சியையும் உண்டாக்குகின்றன  என்பது மருத்துவ ஆய்வுகளாலும் நம் அம்மா, அக்கா, மனைவி, மகளைப் போன்ற பெண்களாலும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. 
கல்விச் சுமையால் பள்ளிகளிலும், பாலியல் பார்வையால் சமூகத்திலும் டார்கெட்டுகளால் வேலை செய்யும் இடங்களிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் பெண்கள். இதனால் அதிக ரத்தப் போக்கு, போதிய சத்து இழப்புகளால் உடல் உஷ்ணமும் இணைந்துகொள்ள அடி வயிற் றில் அதீத வலி  இந்த நாட்களில் படுத்தியெடுக்கின்றன. 
எனக்கு தெரிந்த உறவுக்கார பெண்ணின் மகள் ஷைலஜாவுக்கு வயது 19. கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறாள். துறு துறுவென இருக்கும் திறமையான பெண். அந்த மூன்று நாட்களில் கூட அநாவசியமாக உடம்பை அலட்டிக் கொண்டு தந்தையின் கடையில் பம்பரமாய் இயங்குவாள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாதவிடாய் காலத்தில் அடி வயிறு வலிக்க சுருண்டு படுத்தாள். பிறகு வந்த எல்லா மாதவிடாய் நாட்களும் அவளுக்கு வலியை வழக்கத்தை விட அதிகமாகவே கொடுத்துக்கொண்டிருக்கிறது. 
அந்த நாட்களில் 45 கிலோ எடை கொண்ட உடலை, மொத்தமாக சுருட்டி வயிற்றைப் பிடித்தபடி பந்துபோல் கிடக்கும் அவளைப் பார்க்கவே பாவமாக இருக்கும்.  அவ்வப்போது அதட்டி கெஞ்சி கொடுக்கும் திரவ ஆகாரம் மட்டுமே எடுத்துக் கொள்வாள். 
 மருத்துவரிடம் அழைத்துச்சென்றார்கள். பரிசோதனைகளுக்கு பிறகு சில மருந்து மாத்திரைகளுக்குப் பிறகு, கருப்பை வளர்ச்சி சீராக இருந்தது. ரத்தப்போக்கும் இயல்பாகவே இருந்தது. போதிய சத்துக்கள் இல்லாமலும் அதிக உஷ்ணத்தாலும்  அதீத வலி வந்திருக்கிறது என்றும் அதோடு உடலை அலட்டிக்கொண்டு  ஓய்வு கொடுக்காமல் இருந்திருக்கிறாள் என்றும் சொன்னார்  மருத்துவர். பிறகு சில நாட்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகொடுத்து, மாதவிடாய் காலத்தில் அதிக நேரம் ஓய்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.மேலும் இளநீர், வெந்தயம், பாதாம் பிசின், பழச்சாறு இதர நேரங்களில் சத்துமிக்க உணவு வகைகள் என்று ஒரு உணவுப் பட்டியலே கொடுத்தார். சில மாதங்களிலேயே, நல்ல மாற்றங்கள் தெரிந்தன.  வயிறு வலி தாங்கக்கூடிய அளவில் இருப்பதாகக் கூறினாள். படுக்கையில் சுருண்டு படுக்கிறாள் என்றாலும் அது குறைந்துவிட்டது. முக்கியமாக, இந்த நாட்களில் அவள் எடுத்துக்கொண்ட ஓய்வு, மிக முக்கியக் காரணம். 
தனிமை பலம் :
நமது முன்னோர்கள் காரண காரியங்களின்றி எதையும் செய்ததில்லை. 30 வருடங்களுக்கு முன்பு, அதாவது கடந்த தலைமுறைப் பெண்கள், மாதவிடாய் காலங்களில் வீட்டு விலக்கு நாள் என்று அமர்த்திவைக்கப்பட்டார்கள். மேலும் அந்நாளில் கட்டாய ஓய்வு கொடுத்து மூன்று வேளையும் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தார்கள். 
குடும்பத்தில் மருமகளை வேலை  செய்ய வைத்து சக்கையாக பிழிந்த மாமியார்கள் கூட மாதவிடாய் காலங்களில் மருமகளுக்கு ஓய்வு கொடுத்தார்கள் என்பதை முக்கியமானதாக பார்க்க வேண்டியிருக்கிறது.  கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனியாக இருக்க தனி அறைகளே  ஒதுக்கியிருந்தார்கள். அந்த மூன்று நாட்களும் சாப்பிடுவதற்கும் படுப்பதற்கும் தட்டுகளும், தம்ளர்களும், படுக்கைகளும் தனியாகவே இருக்கும். 
மாதவிடாய்க் காலங்களில் முன்னோர்கள் பெண்களைத் தள்ளி வைக்க வில்லை. வேலைகள், கடமைகளிலிருந்து அவர்களைத் தள்ளி இருக்கச் செய்தார்கள். இந்த நாட்களில் உடல் பலவீனமாக இருக்கும் என்பதால் வேண்டுதல்கள், வழிபாடுகள், ஆலய தரிசனம், சுப நிகழ்ச்சிகள் அனைத்துமே இக்காலத்தில் அவசியமில்லை என்பதை சொல்லாமல் சொல்லின.  இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் சொல்லப்பட்டன.    
ஓய்வு அவசியம் : 
அந்த மூன்று நாட்களில் கட்டாயம் ஓய்வு அவசியம். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் நிச்சயம் அதை கடைப்பிடிக்க முடியாது. இன்று பெண்கள் எல்லா நாட்களிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. வீட்டி லும் பணியிடங்களிலும் விடுமுறையின்றி இயங்குவதால் மாதவிடாய் காலங் களில் தவிர்க்க முடியாமல் ஒருவித அவஸ்தையோடு பணிபுரிகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் இளம் பெண்களும் கூட இதிலிருந்து தப்பமுடிவ தில்லை.எனவேஅந்த நாட்களில் ஓய்வு என்பது சாத்தியமில்லாததாகி விட்டது
மாதவிடாய்க் காலங்களில் சராசரியாக 30-40 மி.லி ரத்தம் வெளியேறுகிறது. இந்த ரத்தத்தில் நீர்ச்சத்து, புரதம், ரத்தம், உப்பு, எண்டோமெண்ட்ரிய திசுக்கள் கலந்து கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மன அமைதியுடன் மன உளைச்சலின்றி இருந்தால் ரத்தப் போக்கும் இயல்பான அளவில் வெளியேற்றப்பட்டு 3 லிருந்து 5 நாட்களுக் குள் சீராகி விடும். இந்த ஓய்வு கருப்பை வளர்ச்சியை ஆரோக்கியமாக்குவதுடன் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கின்றன. 
என்ன செய்யலாம்:
மாதவிடாய்க் காலங்களில் உடல் உஷ்ணம் அதிகம் இருப்பதால் குளிர்ச்சி அடைய மூன்று நாட்களும் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வைத்தார் கள். தற்போது தலைக்கு குளித்தால் நரம்புகள் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் இது மருத்துவத்தில் நிரூபிக்கப்படவில்லை. எனினும் பெண் கள் தங்களது உடல் சூட்டை பொறுத்து தலைக்குக் குளிப்பதைக் கடை பிடிக்கலாம். இதனால் வயிறு உஷ்ணம் தணியும். அடி வயிற்றில் வலி உபாதை ஏற்படாது. உடல் சோர்வையும் மனசோர்வையும் விரட்டும். .
இக்காலத்தில் பெண்கள் கடினமான வேலையைச் செய்யக்கூடாது. சில நேரங்களில் கருப்பை தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உண்டு என்பதால் அதிக சுமையைத் தூக்க கூடாது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். சில நேரங்களில் கருப்பை மடிப்புகளில் ரத்தம் உறையக்கூடும். கருப்பை தசைகள் இறுகக் கூடும், கருப்பையில் வீக்கம், கட்டிகள், திசு சிதைவு போன்றவை உண் டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் அதிக கவனம் தேவை. இந்தக் காலத்தில் அவசியமின்றி பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  
கடினமான உணவுகள் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்த்து எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சாத்வீகமான உணவுகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தவை. வெந்தயம், சீரகத் தண்ணீர், பால், காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
முன்பெல்லாம் பருத்தி துணிகளைப் பயன்படுத்தும் வரை எந்தவிதமான பாதிப்புகளும் நேர்ந்ததில்லை. நாப்கின்கள் பயன்பாடு நாளடைவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால்  உதிரப் போக்கின் தீவிரத்தைக் கொண்டு 3 லிருந்து 4 மணிநேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றுவது அவசியம் என் கிறார்கள் மருத்துவர்கள்.
சாதாரணமாகவே நாள் ஒன்றுக்கு 7 மணிநேர தூக்கம் நல்லது. ஆனால் மாதவிலக்கு காலங்களில் 15 மணிநேரமாவது கட்டாய ஓய்வு தேவை.  இந்த நாட்களில் கருப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் தேவைப்படுவதால் பிற உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்! 
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சீரான மாதவிலக்கு,சரியான அளவு ரத்தப் போக்கு,இயற்கையாக குழந்தைப்பேறு, இயல்பான மெனோபாஸ் என அனைத்தையும் சங்கடமில்லாமல் கடக்க மாதவிடாய் காலங்களில் எடுக்கும் ஓய்வு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், இதுதான் ஆதாரம் என்கிறார்கள் மருத்துவர்கள். 
அதனால் ஆடலாம், ஓடலாம், குதிக்கலாம் என்கிற விளம்பரங்கள், யதார்த்த வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாது என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்! 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

’நாப்கின்’ விளம்பரங்கள்மாதவிடாய்மாதவிடாய் காலம்மாதவிடாய் அயர்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author