3,000 காளைகள், 1,800 மாடுபிடி வீரர்கள்... எப்படி இருந்தது மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாக்கள்?

3,000 காளைகள், 1,800 மாடுபிடி வீரர்கள்... எப்படி இருந்தது மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாக்கள்?
Updated on
2 min read

மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரம் காளைகள், 1,800 மாடுபிடி வீரர்கள் களமாடிய ஜல்லிக்கட்டு திருவிழா போட்டிகள் நிறைவடைந்தன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ] ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றது. மதுரையில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், அடுத்து பாலமேட்டிலும், 3-வது ஜல்லிக் கட்டு அலங்காநல்லூரிலும் நடைபெற்றது. இந்தாண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

பொங்கலன்று அவனியாபு ரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்காக அவனியாபுரம் முத்துகருப்பனுக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 60 பேர் காயமடைந்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு: மாட்டுப் பொங்கல் நாளில் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகள் அவிழ்க்கப்பட்டன. 600 வீரர்கள் களமிறங்கினர். இதில் 17 காளைகளை அடக்கிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 33 பேர் காயமடைந்தனர்.

காணும் பொங்கல் நாளான நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு

வழங்க வேண்டும் என்பது அலங்காநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந் தது. இந்நிலையில் அலங்கா நல்லூரில் முதல்வர் பேசும் போது, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் வருகைக்கு பிறகு நடைபெற்ற சுற்றுகளில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக களமிறங்கி காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளினர். அலங்காநல்லூரில் ஆயிரம் காளைகள் களமிறக்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அனைத்து சுற்றுகளிலும் 600 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

அலங்காநல்லூரில் 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் கார் பரிசு பெற்றார். 2-ம் பரிசாக 17 காளைகளை அடக்கிய பூவந்தி அபிசித்தருக்கு பைக் வழங்கப்பட்டது. இவர் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில், 2 ஆண்டுகளாக முதல் பரிசு பெற்றவர். இதுவரை இல்லாத வகையில் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உயிரிழப்புகள் இன்றி, அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தன. இதற்காக மதுரை மாநகர் காவல் துறை, மாவட்ட காவல்துறை, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவத்துறை, வருவாய்த் துறை,தீயணைப்புத்துறை, செஞ்சிலுவை சங்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் பி.மூர்த்திக்கு பாராட்டு: விழாக் கமிட்டியினர் கூறுகையில், 3 ஜல்லிக்கட்டுகளிலும் மேற்கொள்ளப் பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மிக திட்டமிட்டு நடந்தது. விலை உயர்ந்த பரிசுகள் மட்டுமின்றி, பங்கேற்ற அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மருத்துவ வசதி, பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தன. அரசு அலுவலர் கள், காவலர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனை வருக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் அனுபவம் பெற்ற அமைச்சர் பி.மூர்த்தியின் வழிகாட்டுதல் படி அனைத்து பணிகளும் நடந்ததால், சிறப்பாக முடிந்துள்ளது.

விலை உயர்ந்த பரிசுகள், பிரம்மாண்ட ஏற்பாடுகளால்தான் ஆண்டுக்காண்டு ஜல்லிக்கட்டின் புகழ் ஏற்றம் பெறுகிறது. இதற்கு அமைச்சர் மூர்த்தியின் முயற்சியே முக்கிய காரணம். இதையறிந்தே விழாக்கமிட்டியினர், ஆர்வலர்கள் என பலரும் அமைச்சரின் செயல்பாட்டுக்கு துணை நிற்கின்றனர். காளைகள் பங்கேற்க வாய்ப்பில்லாதவர்களுக்காக தொகுதி வாரியாக தனித்தனியாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர்.

3,000 காளைகள், 1,800 மாடுபிடி வீரர்கள்... எப்படி இருந்தது மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாக்கள்?
கேரளா | பாஜகவில் இணைந்தார் முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ ராஜேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in