Published : 11 Aug 2017 01:48 PM
Last Updated : 11 Aug 2017 01:48 PM

சொக்கத்தங்கம் உசேன் போல்ட்!

உயரப் பறந்தாலும் கால்கள் பூமியில் இருக்க வேண்டும் என்பார்கள். தனது கால்கள் மைதானத்தில் இருக்கும்போதெல்லாம், உயர உயரப் பறந்தவர் ஜமைக்காவைச் சேர்ந்த 30 வயதான உசேன் போல்ட். அந்த உயரத்திலிருந்துகொண்டே விடைபெற நினைத்தவருக்கு, அடி சறுக்கியது. வெண்கலப் பதக்கம் பெருமை கொண்டது!

புத்தாயிரத் தொடக்கத்தில் ‘ட்ராக் அண்ட் ஃபீல்ட்’ எனப்படும் தடகள விளையாட்டுக்களின் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் உசேன் போல்ட். தடகளப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்தும் போக்கு அதிகரித்து, அந்த விளையாட்டுகளின் மீதான ரசிகர்களின் மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்த காலத்தில், போல்ட்டின் வருகை அமைந்தது. போல்ட் வந்தார், அந்த விளையாட்டுகள் இழந்த மதிப்பு, மீண்டும் திரும்பக் கிடைத்தது.

பதக்க வேட்டை

2002 முதல் 2005-ம் ஆண்டுவரை உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய போல்ட், 2007-ம் ஆண்டு ஒஸாகாவில் நடந்த சீனியர் பிரிவு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளியை வென்றதன் மூலம், தனது பதக்க வேட்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டார்.

100 மீட்டர், 200 மீட்டர், 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டம் என்று பல பிரிவுகளிலும் போல்ட் ஜொலித்திருந்தாலும், அவரின் ஃபேவரைட்… குறைந்த மணித்துளிகளில், குறைந்த தூரத்தை மிக வேகமாக அடையும் 100 மீட்டர் ஸ்பிரின்ட்தான்! அது அவருடைய ரசிகர்களின் விருப்பமான பிரிவும்கூட. அதில் அவர் காட்டும் வேகம், ஓடுவதை ஒரு நிகழ்த்துக் கலையாக மாற்றுகிறது. சிறுத்தை ஓடுவதைப் போல போல்ட் அதிவேகமாக ஓடும் காட்சிக் காலத்துக்கும் மறக்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் எனப் பல போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த போல்ட், தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியுடன் விடைபெறுவதாக அறிவித்தார்.

விடைபெற்ற தங்கம்

அதற்குக் காரணம், அவர் பெற்ற வெற்றிகளின் திகட்டுதலாகக்கூட இருக்கலாம். உச்சியில் இருக்கும்போதே ஓய்வு பெற்றுவிடுவதுதான் ஒரு சிறந்த வீரருக்கான அடையாளம் என்றும் அவர் நினைத்திருக்கலாம். கடைசியாக ஒரு தங்கப் பதக்கத்துடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தவருக்கு, தங்கம் அவரிடமிருந்து கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டது. அதுவும் அவரின் விருப்பப் பிரிவான 100 மீட்டர் போட்டியில் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வருத்தம்!

அதனால் போல்ட்டின் சாதனைகளுக்கு ஒன்றும் இழுக்கு ஏற்பட்டுவிடப் போவதில்லை. இத்தனைக்கும் இந்தப் போட்டியில் தங்கம் வென்றவர் ஏற்கெனவே இரண்டு முறை ஊக்க மருந்து பயன்பாட்டுக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜஸ்டின் காட்லின். இந்த ஒரு முறை தங்கத்தைத் தவறவிட்டதற்காக போல்ட்டுக்கு நாம் ஆறுதல் கூறத் தேவை இல்லை. ஊக்க மருந்து பயன்படுத்தாமல், தன்னுடைய பயிற்சி, முயற்சியை மட்டுமே இறுதிவரைக்கும் நம்பி, ‘உலகின் மிக வேகமான மனிதர்’, ‘மின்னல் மனிதர்’ என்று பெயரெடுத்திருக்கிறாரே… அந்தச் சாதனைக்காக, அந்தச் சொக்கத்தங்கத்துக்கு வாழ்த்து கூறி விடைகொடுப்போம்!

* ஒலிம்பிக் தங்கம்: 8

* உலக சாம்பியன்ஷிப் தங்கம்: 11

* காமன்வெல்த் தங்கம்: 1

* 100 மீட்டர் பிரிவில் உலக சாதனைகள் 3 முறை

* மொத்த உலக அளவிலான போட்டிகள்: 22

* இதுவரை அவர் பெற்ற பெரிய வெற்றிகள்: 19

* 34 முறை: உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டத்தை 20 நொடிகளில் கடந்திருக்கிறார்.

* போல்ட்டின் ஓட்டத்தின் அதிகபட்ச வேகம்: ஒரு மணி நேரத்துக்கு 44.57 கிலோ மீட்டர்

* ஓட்டத்தின்போது போல்ட்டின் கால்கள் தாவும் நீளம்: நொடிக்கு 2.5 மீட்டர், அதாவது 9.58 நொடிகளில் 100 மீட்டரை அடைய அவருக்கு 41 அடிகள் போதும். அதாவது, ஒரு நொடிக்கு 4.28 அடிகள் வீதம் அவர் ஓடுகிறார்.

* தானியங்கி நேர அமைப்புக்குப் பிறகு 100 மீ, 200 மீ என இரு பிரிவுகளிலும் சாதனை நிகழ்த்திய ஒரே வீரர் போல்ட்.

கிரிக்கெட்டை துறந்து சாதனை!

கரிபீயன் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் கிரிக்கெட்டும் தடகளமும் இரண்டு கண்களைப் போன்றவை. உசேன் போல்ட் சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட் மீது தீராக் காதலில் இருந்தார் அவர். வேகமாக ஓடி வந்து வீசினால் ஸ்டம்புகள் சிதறும். இவருடைய வேகத்தைப் பார்த்து அசந்துபோன பள்ளி ஆசிரியர், அவருக்கு ஓட்டப்பந்தய ஆசையைக் காட்டி மனதை மாற்றினார். திரும்பவும் கிரிக்கெட் விளையாட வந்துவிடும் உசேனுக்கு, பல சந்தர்ப்பங்களில் சிக்கன் வாங்கிக் கொடுத்து தடகளத்துக்குத் திருப்பி விட்டிருக்கிறார் அந்தப் பள்ளி ஆசிரியர். அப்படித் தடகளத் துறைக்கு மாறிய உசேன் போல்ட், படைத்தது சாதித்தது எல்லாமே இன்று வரலாறாகிவிட்டது.

சிறுத்தை வேகம்!

100 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. எப்போதும் பந்தயம் தொடங்கியவுடன் அவரது ஓட்டம் மந்தமாகத்தான் இருக்கும். முதல் 30 மீட்டரில் உடலை முன்னோக்கிச் செலுத்தி, தலையைக் குனிந்தபடி வேகமெடுப்பார். 50 மீட்டரை அடையும்போது போட்டியாளர்கள் நெருங்குவதை நொடிப்பொழுதில் கணித்துவிட்டு வேகத்தை அதிகப்படுத்துவார். கடைசி 40 மீட்டர் சிறுத்தை வேகத்தில் ஓடி இலக்கை அடைவார். பொதுவாக ஒரு தடகள வீரர் 100 மீட்டரைக் கடக்க 45 அடிக்கு ஓடினால், போல்ட்டுக்கு 41 அடி மட்டுமே போதும்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x