

கா
தலைச் சொல்ல ஏற்ற இடம் எது? சமூக ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில், இதெல்லாம் ஒரு கேள்வியா என நீங்கள் நினைக்கலாம். இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இளம் பெண்களுக்கும் விடை தெரியாத கேள்வியாகவே இது இருக்கிறது. காதலைச் சொல்வதற்குத் தைரியம் வந்த பிறகு, அதைக் காதலி அல்லது காதலனிடம் எங்கே, எந்த இடத்தில் சொல்வது என்று இடத்தைத் தேர்வு செய்வது சிக்கல்தான். ஆனால், ரஷ்யாவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர், நேரலையிலேயே தன் காதலியிடம், காதலைச் வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டியிருக்கிறார்.
ரஷ்யாவில் செவெஸ்டா என்ற தொலைக்காட்சியில் அடுத்தடுத்துச் செய்திகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார் தொகுப்பாளர் டெனிஸ் கோச்சனோவ் (Denis Kochanov). திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘முக்கியமான செய்திகள் எதுவும் தற்போது இல்லை என்பதால் என் காதலிக்கு ஒரு செய்தியைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’ என்று கூறி, நாற்காலியிலிருந்து எழுந்து, ஸ்டுடியோவின் மையப் பகுதிக்கு வந்து கேமராவின் முன்பாக நின்றார்.
தனது சட்டை பாக்கெட்டிலிருந்த சிவப்பு நிறப் பெட்டியை எடுத்தார். அதை மெதுவாக கேமரா முன்பாகத் திறந்து காட்டிய அவர், மண்டியிட்டார். பின்னர், தன் காதலியின் பெயரைக் கூறி, ‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’ என்று மனம் விட்டுக் கேட்டார். நேரலையில் தனது காதலை வெளிப்படுத்திய செய்தி வாசிப்பாளரின் இந்தச் செயல், பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. டி.வி.யைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இது கனவா நிஜமா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, செய்தி நிறைவு பெற்றதாக டைட்டில் கார்டு போடப்பட்டது.
நேரலையில் காதலை வெளிப்படுத்திய விதம் ரஷ்ய சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமூக ஊடகங்களில் முதலிடம் பிடித்த இந்த விஷயத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. டெனிஸ் கோச்சனோவுடைய காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவரது காதலிக்குக் கோரிக்கையும் வைத்தனர். இன்னொருபுறம் பொறுப்புள்ள வேலையில் இருந்துகொண்டு தொகுப்பாளர் செய்த வேலையைப் பலர் கண்டிக்கவும் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் இது அக்கப்போராகிக்கொண்டிருந்த வேளையில், டெனிஸைத் திருமணம் செய்துகொள்ள அவருடைய காதலி சம்மதம் தெரிவித்துவிட்டதாக அவர் பணியாற்றிய தொலைக்காட்சி வாயிலாகச் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு லைக்குகள் குவிந்தன. காதலர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று ரஷ்யா நெட்டிசன்கள் வாழ்த்தியவண்ணம் உள்ளனர்.
காதலுக்குக் கண்ணும் இல்லை; நேரலை என்ற பாகுபாடும் இல்லை!