

சா
தனைகளுக்கும் திறமைகளுக்கும் உடல் குறை எப்போதும் ஒரு தடையாக இருந்ததில்லை. இதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் உயரம் குன்றிய தமிழக வீரர்கள். உயரம் குன்றியவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி என்று அறியப்படும் சர்வதேசத் தடகளப் போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று நாடு திரும்பியிருக்கிறார்கள் இவர்கள். போட்டியில் பங்கேற்கவே கடன் வாங்கிக்கொண்டு சென்ற இந்த வீரர்கள், இந்தியா தலை நிமிரும் அளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் சிறப்பு.
உயரம் குன்றியவர்களுக்கான 7-வது சர்வதேசத் தடகளப் போட்டிகள் அண்மையில் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றன. இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன் உள்பட 42 நாடுகளைச் சேர்ந்த உயரம் குன்றிய வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 21 பேர் பங்கேற்றனர். உயரம் குன்றியவர்களாக இருந்தாலும் சாதனை படைப்பதில் இவர்கள் உச்சம் தொட்டுள்ளார்கள். சிறப்பாகச் செயல்பட்டு 37 பதக்கங்களை இந்தியாவுக்காக அள்ளி வந்துள்ளனர்.
இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன், அச்சம்பத்தைச் சேர்ந்த மனோஜ், புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் செல்வராஜ் ஆகியோர்தான் இவர்கள்.
இதில் 145 செ.மீ. உயரத்துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற கணேசன் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய 3 போட்டிகளிலும் தங்கம் வென்று முத்திரை பதித்தார். 135 செ.மீ. உயரத்துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மனோஜ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கமும் வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் வெள்ளியும் வென்றார். இவர்களின் உதவியுடன் இந்திய அணி 15 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பெற்றது.
வெற்றியுடன் சில நாட்களுக்கு முன்புதான் இவர்கள் நாடு திரும்பினர். ஒலிம்பிக் போட்டிக்கு இணையான இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற கணேசனை உசிலம்பட்டியில் ஊரே திரண்டு வரவேற்றது. அந்த நெகிழ்ச்சியான வரவேற்புக்கு இடையே அவர் கூறுகையில், “உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவது பற்றி மனோஜ் மூலம் தெரிந்துகொண்டேன். அந்தத் தகவல் எனக்குத் தேனாக இனித்தது. அடுத்த நாளே பயிற்சியைத் தொடங்கினேன். முறையாகப் பயிற்சியும் பெற்றேன். 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தேசிய அளவில் பங்கேற்று தங்கம் வென்றேன். இதன்மூலம் கனடாவில் உயரம் குன்றியவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியில் வட்டு எறிதலில் 24 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையையும் படைத்தேன். ஊர் திரும்பியவுடன் உசிலம்பட்டியில் மேளதாளம் முழங்க வரவேற்றனர். சர்வதேசப் போட்டியில் பெற்ற வெற்றியைவிட சொந்த ஊரில் கிடைத்த இந்த வரவேற்பு, எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது” என்று நெகிழ்கிறார் கணேசன்.
இந்தச் சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற கணேசன் வசதி படைத்தவர் அல்ல. போட்டிக்குச் செல்ல சிலரிடம் நன்கொடை பெற்றிருக்கிறார். மேலும் கடன் வாங்கித்தான் கனடாவுக்குச் சென்றிருக்கிறார். சாதனை, தங்கப் பதக்கம், இந்தியாவுக்கு மகுடம் என மகிழ்ச்சியான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தாலும், வாங்கிய கடன் தொகையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் கணேசன் இருக்கிறார்.
இந்தப் போட்டியில் இன்னொரு வெற்றியாளரான மனோஜ் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்துள்ளார். வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுகளுக்காக 17 வயதிலிருந்தே பயிற்சி பெற்று வருகிறார். 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரை தேசிய அளவில் 12 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். கனடா சர்வதேசத் தடகளப் போட்டியில் பங்கேற்க கடந்த 6 மாதங்களாகத் தீவிரப் பயிற்சி எடுத்து வந்த அவர், தற்போது தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான செல்வராஜ் கூறுகையில், “காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.காம். படித்து வருகிறேன். தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். சர்வதேசப் போட்டிக்காகக் கடந்த 3 மாதங்களாகப் பயிற்சி பெற்றேன். கனடாவில் நடைபெற்ற போட்டியில் இரண்டு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றேன். அதில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றேன்” என்கிறார்.
சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இந்த உயரம் குன்றிய வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளோ ஊக்கத்தொகையோ வழங்கப்படவும் இல்லை. பிற விளையாட்டுகளில் சாதிக்கும் வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஆனால், சாதித்த இந்த வீரர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் இவர்களுடைய வேதனை. ‘அரசு ஊக்குவித்தால் தங்களைப் போன்ற உயரம் குன்றியவர்கள் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்கள்’ என்று வேதனையுடன் சொல்கிறார்கள் இந்த வீரர்கள்.