Last Updated : 18 Aug, 2017 10:16 AM

Published : 18 Aug 2017 10:16 AM
Last Updated : 18 Aug 2017 10:16 AM

நிஜம் பேசும் யூடியூப் கண்மணி

மிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூப் சேனல் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’. ஏழு லட்சம் ரசிகர்களைக் கொண்ட இந்த யூடியூப் சேனல், தன்னுடைய முதல் வலைத் தொடரைச் (Web-Series) சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ‘லிவ்இன்’ (Livin) என்ற இந்த வலைத் தொடர் யூடியூப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமான இந்த வலைத் தொடர்கள், இப்போது தமிழில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. ‘ஆஸ் ஐ’ம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ (As I’m suffering from Kadhal) என்ற வலைத் தொடருக்குப் பின்னர் தமிழில் வெளியான இந்த ‘லிவ்இன்’ தொடர் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 13 எபிசோட்களாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் இதுவரை ஒன்பது எபிசோட்கள் யூடியூப்பில் வெளியாகியிருக்கின்றன.

இணைந்து வாழும் கலாச்சாரம்

பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் இந்தத் தொடர், திருமணம் செய்யாமல் இணைந்துவாழும் ஓர் இளம் ஜோடியின் வாழ்க்கையை இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பதிவுசெய்கிறது. ஒளிப்படக் கலைஞரான ஹரிஷ் (கண்ணா ரவி), அவருடைய விசித்திரமான நண்பர் ஸ்வாமி என்கிற சாம் (நவீன் ஜார்ஜ் தாமஸ்), எழுத்தாளர் கனவிலிருக்கும் ஹரிஷின் கேர்ள் ஃபிரண்ட் ஹரிதா (அம்ருதா ஸ்ரீநிவாசன்) என மூவரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது இந்தத் தொடர்.

18chgow_livin3right

இணைந்து வாழும் உறவின் பல்வேறு பரிமாணங்களையும் இந்தத் தொடர் அலசியிருக்கிறது. “மில்லேனிய இளைஞர்கள் சுதந்திரமாக வாழ்வதை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் எதற்காக, எப்படி அந்தத் தேர்வைச் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது இரண்டு தனிநபர்களின் தேர்வு. அதை நாம் கேள்விக் கேட்க முடியாது. இந்தக் கருத்துகளைப் பின்னணியாக வைத்தே இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறேன்.

இணைந்து வாழும் ஓர் இளம் ஜோடி எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள், அவர்களுக்குக் காதல் கொடுக்கும் உத்வேகம் போன்ற அம்சங்களை இந்தத் தொடரில் பேசியிருக்கிறோம். அத்துடன், அந்த இளம்ஜோடிக்கு இடையூறாக ஒரு மேதாவி நண்பன் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை சேர்த்தவுடன் அது தொடரை நகைச்சுவையாகவும் மாற்றியிருக்கிறது” என்று தொடர் உருவான பின்னணியைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொறியியல் பட்டதாரி. தற்போது அடுத்த தொடருக்குத் தயாராகிவருகிறார்.

துணிச்சலும் பொறுப்பும்

திரைப்படங்களோ தொடர்களோ எதுவாக இருந்தாலும், அதில் நாயகிகளைப் பொறுப்பானவர்களாகவும் நாயகன்களைப் பொறுப்பற்றவர்களாகவும் சித்தரிப்பார்கள். ஆனால், இந்தத் தொடர் சற்று வித்தியாசமாகயிருக்கிறது. இதில் நாயகன் ஹரிஷ், வீட்டைச் சுத்தமாக வைத்துகொள்ள முயல்வதும், நாயகி ஹரிதா குப்பை போடுவதுமாக இருக்கிறார்கள்.

தாங்கள் மூவரும் இணைந்துவாழ்வதைப் பற்றி வீட்டு உரிமையாளர், சகோதரி என மற்றவர்களிடம் சொல்லுவதற்குத் தயங்குகிறான் நாயகன் ஹரீஷ். இதற்கு முற்றிலும் நேர்மாறாக, எல்லோரிடமும் எப்போதும் துணிச்சலுடன் உண்மையைப் போட்டு உடைக்கிறாள் ஹரிதா.

18chgow_prabhuramஇயக்குநர் பிரபுராம் வியாஸ்

இவர்கள் இருவருக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு, அறிவியல் புனைவு, ஈரானிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நண்பனாக வரும் சாம். இவர்கள் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“தொடர் வெளியானவுடன் ரசிகர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்தார்கள். சிலருக்கு ‘லிவ்-இன்’ என்ற கருத்து பிடிக்கவில்லை. சிலருக்குப் பிடித்திருந்தது. இப்படி இரண்டு தரப்பும் இயல்பாகவே ‘லிவ்-இன்’ பற்றிய உரையாடலைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கதாபாத்திரங்களை நான் கடந்து வந்த மனிதர்களின் சாயல்களிலிருந்தே உருவாக்கி இருக்கிறேன். இது வேறு எங்கோ நடக்கும் விஷயம் என்று சொல்ல முடியாது.

இந்தத் தொடரில், இணைந்து வாழும் ஜோடிகளின் வாழ்க்கையைக் கூடுமானவரை யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறேன். எந்தவொரு கருத்தைப் பற்றியும் ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்துவதுதான் ஒரு படைப்பாளியின் கடமை. அதை ‘லிவ்இன்’ தொடரில் செய்திருக்கிறேன்” என்கிறார் பிரபுராம்.

திருமணம், குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் தனிமனிதனின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தலையீடுகளைச் செய்கின்றன என்பதை இந்த வலைத் தொடர் அலசுகிறது. திருமணம் எனும் பந்தத்தில் இல்லாத சமத்துவம் இணைந்து வாழும் பந்தத்தில் எப்படி உருவாகிறது என்பதையும் சில அழகான காட்சிகளில் பதிவுசெய்திருக்கிறது இந்தத் தொடர்.

தொடரைப் பார்க்க: http://bit.ly/2v6Ea1y


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x