

செ
ன்னை நகரில் சாலைகளின் நடுவே உள்ள பாலங்களின் கீழே காலியாக உள்ள இடங்களில் பெருமளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவ்வாறு வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிப்போன பாலங்களின் கீழ்ப் பகுதியை வண்ண ஓவியங்களின் காட்சிக் கூடமாக மாற்றியுள்ளனர் துடிப்பான இளைஞர்கள் சிலர்.
சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள பாலத்தின் கீழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஓவியக் கண்காட்சியைத் தனியார் பொறியியல் அகாடமியைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தேசிய கட்டிடக் கலை மாணவர் அமைப்பு சார்பில் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்தும் வருடாந்திர வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த முக்கியமான போட்டியில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்கான போதிய நிதி ஆதாரம் அவர்களிடம் இல்லை. பணம் இல்லை என்ற காரணத்தால் சோர்ந்துபோகாத அவர்கள். தங்களிடம் இருந்த பணத்தைத் திரட்டி பாலத்தின் கீழ்ப் பகுதியில் ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டனர்.
“பாலங்களின் கீழ்ப் பகுதியில் உள்ள தூண்களின் இடையில் பூங்காக்களை அமைப்பது என்பதுதான், நாசாவின் வடிவமைப்புப் போட்டிக்கான எங்களின் திட்டம். அதற்காக நாங்கள் ரப்பர் டயர்களை அழகான இருக்கைகளாக மாற்றி இருக்கிறோம். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள எங்களுக்குப் போதிய பணம் இல்லை. அதனால் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதன்மூலம் நிதி திரட்ட யோசித்தோம். இதற்காக சில ஓவிய கலைஞர்களைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் தங்களின் ஓவியங்களை இந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கச் சம்மதித்தனர். அதேபோல் திட்டப் பணிக்காக அந்த ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலமாக வரும் தொகையிலிருந்து ஐம்பது சதவீதத்தை எங்களுக்குத் தர உறுதியளித்துள்ளனர்” என்கிறார் மாணவி ஸ்ருதி.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு ஓவியர்கள் வரைந்த சுமார் நூறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய்வரை விலையுள்ள ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டன. மொத்த ஓவியங்களின் மதிப்பு சுமார் ஆறு லட்சமாகும்.
“இந்த ஓவியக் கண்காட்சி நடந்த நாளில் மட்டும் சுமார் பத்தாயிரம் ரூபாய்வரை எங்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் தேவையான தொகை எங்களுக்கு இதன்மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார் ஓவிய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாணவி தன்யா.
படங்கள்: ஆர். ரகு