

சிலர் வரலாற்றில் இடம்பிடிப்பவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலரோ வரலாற்றையே மாற்றி எழுதுபவர்களாக இருப்பார்கள். ரோஜர் ஃபெடரர் இரண்டாவது ரகம்!
டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, ஒரு வீரர் வேறு எந்தப் பட்டத்தைப் பெற்றாலும், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாதவரை, அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அவ்வளவு மதிப்புக்குரியது விம்பிள்டன். அதனால்தான் அதை ‘மெக்கா ஆஃப் டென்னிஸ்’ என்று அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அந்த மெக்காவின் அரசன் நிச்சயம் ஃபெடரர்தான். அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ‘ஓபன் எரா’வில் ஒற்றையர் பிரிவில் இதுவரை 8 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஒரே டென்னிஸ் வீரர் ஃபெடரர் மட்டுமே. அது மட்டுமல்ல; ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களைப் பெற்ற வீரரும் இவரே.
1999-ம் ஆண்டு ‘டாப் 100’ தரவரிசைக்குள் வந்தார் ஃபெடரர். அப்போதிருந்து இப்போதுவரை, சுமார் 18 ஆண்டுகளில் 19 பட்டங்கள் வெல்வது சாதாரணமான விஷயமல்ல. ஏனென்றால், டென்னிஸ் அப்பப்பட்ட விளையாட்டு. அது ஒரு வீரரை இன்னொரு வீரருடன் மட்டும் மோதவிடுவதில்லை. ஒரு வீரரின் உடலுக்கும் மனதுக்கும் இடையேயும் மோதலை ஏற்படுத்தும். வெல்ல வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனால், உடல் கேட்காது. உடலில் வலு இருந்தாலும், மனம் ஒருநிலைப்படாது.
இன்றைக்குப் பக்குவமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஃபெடரர் ஒரு காலத்தில் கோபமான இளைஞராக அறியப்பட்டவர். தோல்விகளைச் சகித்துக்கொள்ள முடியாதவராகவும் தன் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்து எறிபவராகவும் இருந்தார். இத்தனை ஆண்டு காலத்தில், தான் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்ற அவர், தன் விளையாட்டுப் பாணியில் மட்டுமல்லாது, தன்னுடைய ‘ஃபிட்னஸ்’ மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு முழங்காலில் காயம் ஏற்பட்ட பிறகு, 6 மாதம் விளையாட்டுக்கு ஓய்வுகொடுத்தார் ஃபெடரர். 35 வயதில், இப்படி ஒரு காயத்தோடு அவரால் விளையாட முடியாது என்ற விமர்சகர்களின் கருத்துகளையெல்லாம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதன் மூலம் தவிடுபொடியாக்கினார். அதன் பிறகு வந்த பிரெஞ்சு ஓபனில் அவர் பங்கேற்கவில்லை. ‘என்னுடைய உடல், அந்தக் களிமண் மைதானத்துக்கு ஏற்றதில்லை’ என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இப்படி எதில் விளையாட வேண்டும், எதில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் தேர்வு செய்யும் போட்டிகளில் கவனமாக இருந்தார். அதன் பலனே இந்த விம்பிள்டன் வெற்றி! இதன் மூலம், வயதானால் டென்னிஸில் பட்டம் வெல்வது கஷ்டம் என்ற வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார் அவர்.
இந்த வெற்றி, வேறு சில வகைகளிலும் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்தப் போட்டியில்தான் தன்னுடைய பத்தாயிரமாவது ‘ஏஸை’க் கடந்தார் ஃபெடரர். தவிர, இந்த விம்பிள்டனில் அவர் எந்த ஒரு போட்டியிலும், ஒரு ‘செட்’கூட இழக்கவில்லை.
2003-ம் ஆண்டு விம்பிள்டனில்தான் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஃபெடரர். அந்த முதல் பட்டத்துக்கும் இப்போது பெற்றிருக்கிற 19-வது பட்டத்துக்கும் இடையே அவரது விளையாட்டுப் பாணி, அறிவியலும் கவிதையும் கலந்த ஒன்றாக மாறியிருக்கிறது. அதனால்தான் ஃபெடரருக்கு இது ‘கரியர் பீக்!’
‘ஆண்டி முர்ரே, ரஃபேல் நடால் போன்ற வீரர்களுடன் ஃபெடரர் மோதவில்லை. அதனால்தான் அவர் வெற்றிபெற்றுவிட்டார்’ என்று விமர்சிப்பவர்கள் உண்டு. இத்தனைக்கும், கடந்த ஆண்டு விம்பிள்டனில் ஒவ்வொரு வீரரும் பெற்ற முடிவுகளை வைத்துத்தான் இந்த ஆண்டு எந்த வீரர் யாரோடு போட்டி போட வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.
மேலும், நோவாக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ், ஆண்டி முர்ரே போன்றவர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள். அவர்கள் ஃபெடரரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ‘ஃபிட்னஸ்’. ரஃபேல் நடால் போன்றவர்கள் ஃபெடரரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது, எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்பதைத்தான்!
ஒரு வீரர் ‘சர்வ்’ செய்யும் பந்தை எதிராளி தொட முடியாமல் போவதை டென்னிஸில் ‘ஏஸ்’ என்று சொல்வார்கள். ஃபெடரர் தனது இத்தனை கால அனுபவம், திறமை, ஃபிட்னஸ் எல்லாவற்றையும் ஒரு டென்னிஸ் பந்தாக்கி, எதிராளியிடம் அனுப்புகிறார். அந்த ‘சர்வை’ எடுப்பதும், எடுக்காமல் விடுவதும் எதிராளியின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அந்த ‘சர்வை’ எடுக்க முடியாது என்பதுதான் இப்போதைக்கான நிதர்சனம். அப்படிப் பார்த்தால் அவரது இந்த விம்பிள்டன் வெற்றியும் ஒருவகையில் ‘ஏஸ்’தான்!