தகிக்கும் வெப்பம்... ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? - மருத்துவர்கள் விளக்கம்

கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற தொண்டர்கள் தாகத்தால் தண்ணீர் அருந்துகின்றனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற தொண்டர்கள் தாகத்தால் தண்ணீர் அருந்துகின்றனர்.

படம்: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

கோவை: சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. பிரச்சார கூட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பிரச்சாரங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் ஆங்காங்கே மயக்க நிலையை அடைகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என ஏற்கெனவே சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம், வாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது தேர்தல் காலம் என்பதால், வெயிலில் அரசியல் கட்சியினர் பரப்புரை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால், அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற வெப்ப வாத பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மனைகளில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக ஹீட் ஸ்ட்ரோக், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படக்கூடியது. உடல் சூடு 40 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைந்து, சோர்வு, தளர்வு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை வரும்.

பொது இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் தொடர்ச்சியாக நீர் அருந்த வேண்டும். மயக்கம் வராமல் முன்னெச்சரிக்கையாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வெயிலை தவிர்த்து நிழலான பகுதிகளில் நிற்க வேண்டும்.

வெளி இடங்களில் பணிபுரியும்போது உடல் சோர்வு, தளர்வு இருந்தால் நீர் அருந்தி காற்றோட்டமான இடத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். அதேபோல் தலை சுற்றல் இருந்தாலும் ஓய்வு எடுக்க வேண்டும். உடல் சோர்வடைந்த நிலையில் தொடர்ந்து வேலை செய்யும்போது மயக்கம் ஏற்பட்டு உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

இளநீர், பழரசம், மோர் போன்ற இயற்கை பானங்களை அருந்த வேண்டும். நண்பகல் நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேவையின்றி வெளியே செல்லக்கூடாது. குடை எடுத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதர உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளை இரு வேளை குளிக்க வைக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பவர்கள் மயக்க நிலையை அடைந்தால் கோவை அரசு மருத்துவமனை யில் ஒரு வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற தொண்டர்கள் தாகத்தால் தண்ணீர் அருந்துகின்றனர்.</p></div>
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in