Last Updated : 11 Jun, 2019 11:15 AM

 

Published : 11 Jun 2019 11:15 AM
Last Updated : 11 Jun 2019 11:15 AM

வலை 3.0: காபி பானையால் வந்த வெப் கேமரா!

முதல் வலை பிரவுசரை டிம் பெர்னர்ஸ் லீ உருவாக்கினாலும், இணையவாசிகளால் முதல் பிரவுசர் எனும் பெருமையை மொசைக் பிரவுசரே பெற்றது. இந்த பிரவுசரே வலையை வெகுஜனமயமாக்கியது. வலையைச் சாமானிய மக்களிடம் கொண்டுசெல்வதிலும் மொசைக் முக்கியப் பங்காற்றியது.

புதிதாக உருவாக்கப்பட்ட வலையை அடிப்படையாகக் கொண்டு பிரவுசர் உள்ளிட்ட சேவைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதை மொசைக் உணர்த்தியது. வலையை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் பொதுமக்களுக்கு உணர்த்தியது.

கேமரா வந்த விதம்

மொசைக் பிரவுசர் உருவாவதற்கு முன்பு, வலையின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த இரு விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. ஒன்று, வலையில் முதல் ஒளிப்படம் பதிவேற்றப்பட்டது. மற்றொன்று, உலகின் முதல் வெப் கேமரா வலையில் இணைந்தது. இந்த இரு நிகழ்வுகளும் வலை வளர்ச்சியில் முக்கிய மைல்கற்கள்.

இவற்றில் வெப் கேமராவின் கதை கொஞ்சம் சுவாரசியமானது. இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானிகள் முதல் வெப் கேமராவை அமைத்தனர். பல்கலைக்கழகக் கணினி மையத்தின் ஓரிடத்தில் காபி இயந்திரம் இருந்தது. விஞ்ஞானிகள் களைப்படையும்போது அங்கு வந்து காபி பருகுவார்கள். இதில் பிரச்சினை என்னவெனில், சில நேரத்தில் விஞ்ஞானிகள் வரும்போது காபி பானை காலியாக இருக்கும். காபியை நிரப்பிய பிறகே அதைப் பயன்படுத்த முடியும். காபியை எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியிருந்தது.

ஏமாற்றத்தைத் தவிர்க்க விஞ்ஞானிகள் வழி ஒன்றைக் கண்டுபிடித்தனர். காபி இயந்திரத்தின் மீது ஒரு கேமராவைப் பொருத்தி அதைப் பல்கலைக்கழக கணினிகளுடன் இணைத்துவிட்டனர். கேமரா காட்சிகளைப் பதிவாக்கிக்கொண்டே இருக்கும். கணினியில் கேமரா காட்சியைப் பார்த்தால், காபி இயந்திரத்தில் காபி இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். 1991-ல் அமைக்கப்பட்ட இந்த கேமராதான் 1993-ல் வலையில் இணைக்கப்பட்டது.

வலைக்கு வந்த கேமரா

பல்கலைக்கழகத்தில் இருந்த விஞ்ஞானி ஒருவர், இந்த காபி பானை கணினி வலைப்பின்னலில் இணைக்கப்படாமல் இருந்தார். மற்ற விஞ்ஞானிகள்போல அவரால் காபி பானைக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. காபி பானை மென்பொருளை அவருடைய கணினியில் நிறுவுவது சிக்கலாக இருந்தது. இந்நிலையில் புதிதாக அறிமுகமாகியிருந்த வலையைப் பற்றிக் கேள்விபட்டிருந்தவர், ஒரு நிரலை எழுதி காபி பானையை வலையில் இடம்பெற வைத்துவிட்டார். ஆக, அவர் விரும்பிய போதெல்லாம் காபி பானையை வலையில் பார்க்க முடிந்தது.

காபி பானை கேமராவில் கறுப்பு வெள்ளைக் காட்சிதான் பதிவானது. கேமராவை இணையத்தில் இணைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் காட்சிகளைக் காணலாம் எனும் சாத்தியத்தை இது உலகுக்கு உணர்த்தியது. ஒரு விதத்தில் இன்று பரவலாக இருக்கும் இணைய ஸ்டிரீமிங் சேவைக்கு இந்த வெப்கேமே முன்னோடி.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x