

மு
ள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது பழமொழி. அதுபோலவே இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் ஆபத்பாந்தவர்களாக இணையவாசிகளே மாறியுள்ளனர். ஆமாம், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள்தாம் இதற்காகக் களமிறங்கியுள்ளனர். இதற்காக ‘தொழில்நுட்பத்தின் உண்மை முகம்’ என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு முயற்சியை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?
இன்றைய பதின்ம வயதினர் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், வாழ்வில் என்னனென்ன விஷயங்களை இழக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றியும், குடும்ப உறவுகளுக்குள் இருக்க வேண்டிய அத்தியாவசிய பண்புகள் குறைந்துவருவது பற்றியும் பல சந்தர்ப்பங்களில் மனநல நிபுணர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பாதிப்புகளைத் தடுப்பதே ‘தொழில்நுட்ப உண்மை முக’த்தின் முதன்மைக் குறிக்கோள்.
இந்த அமைப்பினர் சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து விடுபட எப்படி முயற்சி எடுக்கிறார்கள்? உதாரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் கணக்குகளிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை முழுமையாக அணைத்துவிட்டு, எப்போதும்போல் அன்றாடப் பணிகளைக் கவனிக்கலாம் என்பது போன்ற யோசனைகளும் இதில் அடக்கம். இதனால், அவ்வப்போது சமூக வலைத்தளங்களை ஸ்மார்ட்போன் மூலம் பார்த்து நோட்டிபிகேஷன்களுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள்.
சர்வதேச அளவில் ‘காமன் சென்ஸ்’ என்ற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி பதின்ம வயதினர் சராசரியாகத் தினமும் 9 மணி நேரத்தைச் சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவதில் செலவிடுகின்றனர் என்றும், 9 முதல் 12 வயதுடையவர்கள் தினமும் 6 மணி நேரத்தை இதற்காகச் செலவிடுவதாகவும் சொல்லியுள்ளது. நண்பர்களுடனான சாட்டிங் ஒரு பக்கம் நடைபெறும் அதேநேரம், சமூக வலைத்தள நிறுவனங்கள் செய்யும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
“பதின்ம வயதில் உருவாக வேண்டிய உணர்வுசார் நுண்ணறிவு, அறிவாற்றல் வளர்ச்சி, சமூகம் மீதான பிணைப்பு போன்றவற்றைச் சமூக வலைத்தளங்கள் கபளீகரம் செய்கின்றன” என்று எச்சரிக்கிறார் காமன் சென்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜேம்ஸ் ஸ்டேயர். “இந்த விஷயங்களை எல்லாம் பெற்றோர் தெரிந்து கொள்ளும்போது, சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து இளைஞர்களை மீட்கும் முயற்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்” எனவும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஜேம்ஸ்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆரம்ப கால நிறுவனர்களில் ஒருவரான சென் பார்க்கர் (Sean Parker), “இந்த விஷயத்தை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். “சமூக வலைத்தளங்களின் ஆளுமையும் அடிமைப்படுத்தும் திறனும் மனித உளவியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக” எச்சரிக்கும் அவர், “வருங்காலச் சந்ததிகளின் மூளையில் அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சிகரெட், பான் மசாலா போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் போல் சமூக வலைத்தளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரலும் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் குருவாக அறியப்பட்ட ரோஜர் மெக்னாமி, இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஏற்படும் தாக்கத்தை வெகுவாக அறிந்து வைத்துள்ளார். இதுபற்றி மார்க் ஸக்கர்பெர்க்கிடம் பேச முயன்றும், தம்மால் அது முடியாமல் போனதாகவும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ளவர்களில் ஒருவரான ரோஜர் மெக்னாமி மட்டுமல்ல; ஆப்பிள் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களும் அந்தந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப அடிமைத்தனத்தால் இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் ஆராயலாம் என்று விரிவான கடிதம் எழுதியிருக்கின்றனர் என்பதுதான் தற்போதைய ஆறுதல்!