

வலையில் பதிவேற்றப்பட்ட முதல் தகவல் எது? அது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். செர்ன் ஆய்வுக்கூடத்தின் தொலைபேசிப் புத்தகம்தான், முதன்முதலில் வலையில் இடம்பெற்றது.
ஆம், வெறும் தொலைபேசி எண்கள்தான், முதல் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. வெறும் தொலைபேசி எண்களில் என்ன சுவாரசியம் இருந்திருக்கும் என உங்களுக்குத் தோன்றலாம்.
வலை உருவாக்கப்பட்டபோது அது உடனே எல்லோருக்கும் அறிமுகம் செய்யப்படவில்லை. வைய விரிவு வலை (www), உண்மையிலேயே உலகம் தழுவிய தாக மாற சில காலம் தேவைப்பட்டது.
ஆனால், வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கான வரவேற்பு பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவர் ஒரு கர்மவீரரைப் போல வலையை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
முதல் இணையதளம்
1989-ம் ஆண்டில் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட வலைக்கான கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, லீ முதல் பிரவுசரை உருவாக்கினார். முதல் பிரவுசரை உருவாக்க அவருக்கு ஒரு மாத காலம் தேவைப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த ஸ்டீவ் ஜாப்சின் ‘நெக்ஸ்ட்’ கம்ப்யூட்டரில் ‘வேர்ல்டு வைடு வெப்’ எனும் பெயரில் இந்த பிரவுசரை உருவாக்கியிருந்தார்.
ஆனால், ‘தகவல் பரிமாற்றத்துக்கான புதிய வழியான வலை’ எனும் கருத்தாக்கத்துடன் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, இந்த பிரவுசரின் பெயர் ‘நெக்சஸ்’ என மாற்றப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பாகத் தகவல் அளிப்பதற்கான முதல் இணையதளம் (வலைத்தளம்) அமைக்கப்பட்டது. https://worldwideweb.cern.ch/ எனும் அந்த இணையதளம், அதன் மூல வடிவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வலையின் வரலாறு தொடர்பான சுருக்கமான விவரங்களை இந்தத் தளத்தில் அறிந்துகொள்ளலாம். இதேபோல முதல் பிரவுசரும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல் பிரவுசரை இயக்கியும் பார்க்கலாம்.
முதல் தகவல்
வலையை எப்படிப் பயன்படுத்த லாம் என உணர்த்துவதற்காக, செர்ன் ஆய்வுக்கூடத் தொலைபேசிப் புத்தகத்தை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் லீ. இதன் அருமையை உணர்ந்த செர்ன் ஆய்வுக்கூட ஊழியர்கள் சிலர், எப்போதும் தங்கள் கணினியில் இந்த இணையப் பக்கத்தைத் திறந்துவைத்து, தேவைப்படும்போது அதிலிருந்து தேவையான தொலைபேசி எண்ணை அறிந்துகொண்டனர். இதுவே வலையின் முதல் பயன்பாடுகளில் ஒன்றாக அமைந்தது.
செர்ன் ஆய்வுக்கூடத்தில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்திருந்தால் வலை எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும் என்று தெரியவில்லை. உண்மையில் லீ, உலகம் தழுவிய தகவல் பரிமாற்ற வசதியாகத்தான் வலையை உருவாக்கி இருந்தார்.
எனவே, வலையை உலகுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ‘ஆல்ட்.ஹைபர்டெக்ஸ்ட்’ எனும் யூஸ்நெட் விவாத குழுவில் லீ, வலை பற்றியும், அதை அணுகுவதற்கான பிரவுசர் பற்றியும் விரிவான தகவலை வெளியிட்டார். வலைக்கான முதல் பொது அறிவிப்பாக மட்டும் அல்லாமல் இதில் இணைவதற்கான அழைப்பாகவும் இது அமைந்தது.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com