

“வணக்கம் நேயர்களே! நான் உங்கள் நிலானி, நீங்க என்னோடு சீனாவுக்கு ஃபேஸ்புக் வழியா வாங்க” எனச் சிரித்த முகத்துடன் பேசுகிறார் அந்தச் சீனத்து இளம் பெண். அவர் பதற்றம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் தமிழைப் பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. அழகான தமிழ்ப் பேச்சால் இணையத்தில் பிரபலமாகிவருகிறார் இந்த சீனப் பெண்.
சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார் நிலானி என்றழைக்கப்படும் லி யுவான். அதுபோக அந்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், சமூக வாழ்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஃபேஸ்புக் மூலம் நேரலை செய்து ஆச்சரியமான விஷயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேயர்களுக்குத் தமிழில் வழங்குகிறார்.
வைரலான முதல் வீடியோ
முதன் முதலாக அவர் நேரலை செய்தது உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைப் பற்றிதான். அதன் அரிய தகவல்களை நேரலையில் வெளியிட்டார் நிலானி. சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல்களைச் சரளமாகத் தமிழில் நிலானி பேசியது இணைய உலகின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ சில நாட்களிலேயே இணையத்தில் வைரலானது.
இந்தப் பெண்ணின் தமிழ்ப் பேச்சுக்கு ஏராளமான தமிழர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து, ‘தன்னுடைய அழகான தமிழ்ப் பேச்சால் இந்தப் பெண் சீனப் பெருஞ்சுவரையே வென்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆங்கிலக் கலப்பு கிடையாது
சீனப் பெருஞ்சுவர் மட்டுமல்லாமல், சீனாவில் புகழ்பெற்ற தாமரைக் குளம், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஐஸ் ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றையும் நிலானி பதிவுசெய்துள்ளார். தன்னுடைய நேரலையின்போது தமிழில் குறிப்பு எதையும் எழுதி வைத்துக்கொள்ளாமல் தான் காணும் காட்சிகளை இயல்பான பேச்சு வழக்கில் நிலானி பேசுவது தனிச் சிறப்பு.
அவருடைய ஒவ்வொரு நேரலையின்போதும் துளிகூட ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் அத்தனை அழகாகப் பேசுகிறார். 2018-ம் ஆண்டைக் குறிப்பிடும்போது ‘ஈராயிரத்து பதினெட்டாம் ஆண்டு’ என்றும் விமானம் வழியாக அனுப்பும் தபாலை ‘விண் அஞ்சல்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நிலானி கவனமாகவே உள்ளார்.
நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் அறிவு என இன்றைய தமிழ் இளைஞர்கள் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சீனப் பெண்ணான நிலானியின் தூய தமிழ்ப் பேச்சைத் தமிழ் இளைஞர்கள் பார்த்தால், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என நிச்சயம் நம்பலாம்.
நிலானியின் வீடியோவைக் காண: https://www.facebook.com/critamil/videos/1861717343923773/