அரசியல் வேறு காதல் வேறு
இந்தியாவில் இது தேர்தல் நேரம். அதனால், இளைஞர்களின் அரசியல் நம்பிக்கைகள் காதலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக ‘ஓகேக்யூபிட்’ (OkCupid) என்ற டேட்டிங் செயலி ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வில், பெரும்பாலான இந்திய மில்லேனியல்கள், அரசியலையும் காதலையும் இணைக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
பெண்களில் 54 சதவீதத்தினர், காதலர் தங்கள் அரசியல் நம்பிக்கையுடன் ஒத்துப்போக வேண்டுமென்ற கருத்தை வைத்திருக்கின்றனர். ஆனால், ஆண்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே, காதலி தங்கள் அரசியல் நம்பிக்கையுடன் ஒத்துப்போக வேண்டுமென்ற கருத்தை வைத்திருக்கின்றனர்.
இந்த ஆய்வில், பெரும்பாலான மில்லேனியல் இளைஞர்கள் அரசியலைத் தங்கள் காதல் வாழ்க்கையுடன் இணைக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். தீவிரமான அரசியல் (வலதுசாரி அல்லது இடதுசாரி) கருத்துகளைக் கொண்டவர்களது அரசியலில் வன்முறை தலைகாட்டாதபட்சத்தில், காதலிப்பதில் பிரச்சினை இல்லை என்று ஆண்களில் 43 சதவீதத்தினரும் பெண்களில் 37 சதவீதத்தினரும் தெரிவித்திருக்கிறார்கள். 25 சதவீத ஆண்களும், 29 சதவீதப் பெண்களும் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்று 92 சதவீத ஆண்களும் 91 சதவீதப் பெண்களும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் 2,00,000 பேர் பதில் அளித்திருக்கிறார்கள். இந்திய இளைஞர்கள் அரசியலையும் காதலையும் பிரித்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றே இந்த ஆய்வின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
