Last Updated : 19 Mar, 2019 11:07 AM

 

Published : 19 Mar 2019 11:07 AM
Last Updated : 19 Mar 2019 11:07 AM

சூழலியல் செல்ஃபி எடுப்போமா?

வின்னர் படத்தில் வரும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்று 'Challenge for bored teens' எனும் ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இந்த ஹேஷ்டேக்கைத் தொடங்கிவைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பைரன் ரோமன். ஒரு நாள் அவருக்குச் செய்வதற்கு வேலை எதுவுமில்லாமல் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் குவிந்துகிடந்த குப்பை அவர் கண்ணில் பட்டது. உடனடியாக அந்தக் குப்பையை ஒளிப்படம் எடுத்தார். பின்பு தானே களத்தில் இறங்கி, அந்தக் குப்பையை அகற்றி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினார்.

குப்பையை அகற்றியபின் சுத்தமாக இருந்த அந்த இடத்தையும் ஒளிப்படம் எடுத்தார். பின்பு தனது முகநூல் பக்கத்தில், ‘சேலஞ்ச் ஃபார் போர்டு டீன்ஸ்’ எனும் ஹாஷ்டேக்கை இட்டு, அந்த இரண்டு படங்களையும் பதிவேற்றினார். மற்றவர்களையும் அதே போன்று செய்ய முடியுமா என்று சவாலுக்கு அழைத்தார். இதுவரை அந்தப் படத்தை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். பகிர்வது மட்டுமல்ல; பலரும் தங்கள் பகுதிகளிலிருந்த குப்பையை அகற்றி, அந்தப் படங்களையும் பகிர்ந்தனர்.

‘போர்டு டீன்ஸ்' மட்டும் இந்தச் சவாலில் பங்கேறவில்லை. உலகெங்கும் சூழலியல் மீது அக்கறை கொண்ட பலரும் இந்தச் சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ரோமனின் சலிப்பு இன்று சுற்றத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் முயற்சிக்கு விதையாகி உள்ளது. கோடை விடுமுறையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? வாங்களேன், ஒரு சூழலியல் செல்ஃபி எடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x