

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தற்காலத்துக்குப் பொருந்தும்படியான நவீனச் சிற்பங்களாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு ஓவியக்கலைஞர் கே. மாதவன் உருவாக்கிய சிற்பங்களையும் ஓவியங்களையும் அண்மையில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ‘ஆர்ட் ஹவுஸ்’ கேலரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது.
திருக்குறள் தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் ஏற்றதாக இருக்கிறது என்பதைச் சிற்பங்கள் வழியாக விளக்கியிருக்கிறார் மாதவன். இந்தச் சிற்பக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் திருக்குறளின் கருத்துகளை அழுத்தமாகவும் அழகாகவும் பிரதிபலிக்கின்றன. திருக்குறளின் 133 அதிகாரங்களை விளக்கும்படி இவர் வடிவமைத்திருந்த சிற்பங்களுக்குத் தமிழ் ஆர்வலர்களிடமும் மக்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சென்னையைச் சேர்ந்த ‘ தி சிம்பல்’ நிறுவனம் திருக்குறளை உலகம் முழுவதும் பிரபலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சிற்ப-ஓவியக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வரும் ஏப்ரல் மாதம், இந்நிறுவனம் ஓவியங்களுடனும் விளக்க உரையுடனும் வடிவமைத்திருக்கும் திருக்குறள் புத்தகமும் திருக்குறளுக்கான பிரத்யேகச் செயலியும் அறிமுகமாகவிருக்கின்றன.
அப்போது மீண்டுமொரு முறை இந்தச் சிற்ப-ஓவியக் காட்சி நடைபெறும் என்று தெரிவித்த மாதவன், “திருக்குறளின் அதிகாரங்களுக்கான சிற்பங்களைக் கருத்துருவாக்கம் செய்வது சவாலாக இருந்தது. முதலில், திருக்குறளின் அனைத்து அதிகாரங்களையும் படித்தேன். முதற்கட்டமாக என் கருத்தாக்கத்தை ஓவியங்களாக வரைந்துகொண்டேன். அதன் பிறகு, அவற்றைச் சிற்பங்களாக மாற்றினேன்” என்று சொல்கிறார் மாதவன். இவர் நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.