

ஓடும் வண்டியிலிருந்து திடீரென இறங்கி ஆட்டம் போடும் ‘கிகி’ சவால் கடந்த ஆண்டு சமூக ஊடகத்தை உலுக்கியது. இந்தப் புத்தாண்டு ‘10 ஆண்டு சவா’லுடன் பிறந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் 10 ஆண்டு சவாலே பேச்சாக உள்ளது. இந்த 10 ஆண்டு சவாலைப் பிரதிபலிக்கும் படங்களை நீங்களும் பார்த்து ரசித்திருக்கலாம். நீங்களேகூட 10 ஆண்டு சவாலில் பங்கேற்றிருக்கலாம்.
சவால் என்றவுடன், ஏதோ பெரிய சங்கதி என விஷயம் தெரியாதவர்கள் மிரண்டுவிட வேண்டாம். பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது 2009-ல் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் அதன் அருகிலேயே இந்த ஆண்டு (2019) எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் பகிர்ந்துகொள்வதுதான் இந்த சவாலின் மையம். பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது வளர்ச்சியை இதன் மூலம் வெளிப்படுத்தலாம். அல்லது பத்தாண்டுகள் ஆகியும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
எப்படியோ, 10 ஆண்டு கால இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டுவிதமான படங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் இந்த சவால். #10-Year Challenge எனும் ஹாஷ்டேகுடன் பலரும் இந்தப் படங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். #2009 vs. 2019 சவால், #குளோஅப் சவால் Glow Up Challenge என்ற ஹாஷ்டேகுடன் இந்தப் படங்கள் பகிரப்பட்டன.
இதனிடையே ஹாலிவுட் நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட பிரபலங்களும் தங்கள் பத்தாண்டு காலத் தோற்றத்தைப் பகிர்ந்துகொள்ள இந்தச் சவால் பிரபலமானது. அதே நேரத்தில் பாலிவுட் பிரபலங்கள் சோனம் கபூரும், பிபாஷா பாசுவும் தங்கள் பங்குக்குப் பத்தாண்டு காலத் தோற்றத்தைப் பகிர்ந்துகொண்டு இந்தப் போக்கை மேலும் பிரபலமாக்கினர்.
பிரபலங்களின் அணிவகுப்பு
அவ்வளவுதான், சமூக ஊடகப் பயனாளிகள் பலரும், தங்கள் பழைய ஒளிப்படத்தைத் தூசி தட்டி எடுத்து, தற்போதையை படத்துடன் பகிர்ந்துவருகிறார்கள். இந்தப் படங்களுடன் பிரபலங்கள் பகிர்ந்துகொள்ளும், படக்குறிப்புகளும் சுவாரசியமாக அமைந்துள்ளன. நீங்கள் உற்சாகத்தை அனுபவிக்கும்போது காலம் உண்மையில் பறக்கிறது என்று நடிகை ரீஸ் விதர்ஸ்பூன் குறிப்பிட்டுருந்தார். எத்தனைவிதமான கட்டங்களுக்கு வாழ்க்கை நம்மை உட்படுத்துகிறது என்பதை ரசிப்பதாக நடிகை பிபாஷா பாசு குறிப்பிட்டிருந்தார்.
ஒரு பக்கம் 10 ஆண்டு சவால், பிரபலமாகிக்கொண்டிருக்கும் நிலையில், மீம் கலைஞர்களும் இந்தப் போக்கில் இணைந்து, தங்கள் பாணியில் 10 ஆண்டு சவாலைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். இந்தப் போக்கு, கிரிக்கெட் உலகையும் விட்டுவைக்கவில்லை. தோனி ரசிகர்கள், தங்கள் தல, பத்தாண்டுக்குப் பிறகும் சிக்சர்களை விளாசுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டனர். பெங்களூரு ஐபிஎல் அணி, விராட் கோலியின் 10 ஆண்டு பழைய படத்தைப் பகிர்ந்துகொண்டது.
பாஜக ஆதரவாளர்கள், தங்கள் பங்குக்கு, 5 ஆண்டு சவால் எனும் ஷாஷ்டேகுடன், மோடி ஆட்சியின் சாதனையைப் பகிர்ந்துகொண்டு, இந்தப் போக்கைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர் இது நல்லதா?.
இது நல்லதா?
சமூக ஊடகங்களில் அடிக்கடி இப்படிப் புதிய போக்கு அலையென உண்டாகி கவனத்தை ஈர்ப்பது வழக்கம்தான். 10 ஆண்டு சவாலைப் பொறுத்தவரை தனி மனிதர்கள் முதல் பிரபலங்கள்வரை, பலரும் தங்கள் சுயத்தை அல்லது மாற்றத்தை வெளிப்படுத்திக்கொள்ள வழி செய்திருக்கிறது.
ஆனால், இந்தப் போக்கு வெறும் அலுப்பூட்டும் படங்களின் பகிர்வாக மட்டும் அமையாமல், புவி வெப்பமாதல் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நல்லவிதமாகத் திசை திரும்பியிருக்கிறது.
10 ஆண்டு சவால் சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் இல்லை. வயர்டு டாட் காம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று, உண்மையில் இந்த 10 ஆண்டு சவால், ஃபேஸ்புக்கின் தகவல் திரட்டும் முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகத்தை முன்வைத்துள்ளது. முக உணர்வு தொழில்நுட்பத்துக்குப் பயிற்சி அளிப்பதற்காக மனிதர்கள் வயதாகும் தோற்றம்கொண்ட படங்களைத் திரட்ட இந்தப் போக்கு ஊக்குவிப்பதாக இந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.
இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், தகவல் திருட்டு பரவலாகும் காலத்தில் நம்பாமலும் இருக்க முடியவில்லை.