

காஷ்மீரைச் சேர்ந்த 21 வயதான ஹுசைஃப் ஷா ட்ரிக் கோல் அடிக்கும் வீரர்களில் இந்தியாவில் புகழ்பெற்றவர். அண்மையில் உலக அளவில் நடைபெற்ற ட்ரிக் கோல் அடிக்கும் வீரர்களின் பட்டியலில் இவர் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். சரி, அதென்ன ட்ரிக் கோல்?
கால்பந்தாட்ட விளையாட்டில் கோல் போஸ்ட்டை நோக்கித்தான் பந்தை உதைப்பார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் ட்ரிக் கோல் விளையாட்டில் அப்படியல்ல; ஏதோ ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள இலக்கை எந்த இடத்திலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் குறிபார்த்து கோல் அடிக்க வேண்டும். வெளிநாட்டு இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான இந்த ட்ரிக் கோல் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த விளையாட்டில்தான் ஹுசைஃப் சிறந்து விளங்கி வருகிறார்.
உலகின் நம்பர் ஓன் கால்பந்து வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவின் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற போட்டியில்தான் ஹுசைஃப் ஷா, 4-வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
சிறு வயது ஆசை
ஹுசைஃப் ஷா தற்போது வங்கதேசத்தில் மருத்துவம் படித்துவருகிறார். சிறுவயதிலிருந்தே கால்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டவர். உள்ளூரில் பல அணிகளுக்காகக் கால்பந்தாட்டம் விளையாடியவர். தன்னுடைய சீனியர் மாணவர்கள் கால்பந்தை வைத்துக்கொண்டு ட்ரிக் கோல் அடிப்பதைப் பார்த்த ஹுசைஃப் அதேபோல் தானும் செய்து பார்க்க ஆசைப்பட்டார்.
இதற்காக வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ட்ரிக் கோல் பயிற்சி மேற்கொண்டார். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பின்புறம் உள்ள கூடையில் கோல் அடிப்பது, உருண்டு ஓடிக்கொண்டிருக்கும் டயர் நடுவில் கோல் அடிப்பது என ஹுசைஃப் ஷாவின் ட்ரிக் கோல்கள் அடிப்பதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். சில ட்ரிக் கோல்களை அடிக்க அவர் 16 மணிநேரம் கூடப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
இவரது ட்ரிக் கோல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. இந்த இளம் மருத்துவரின் எதிர்காலக் கனவு, லட்சியம் எல்லாமே ட்ரிக் கோல் அடிப்பதில் புதுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
ஹுசைஃப் ஷாவின் ட்ரிக் கோல்களைக் காண: https://bit.ly/2FmbP0L