Last Updated : 08 Jan, 2019 10:50 AM

 

Published : 08 Jan 2019 10:50 AM
Last Updated : 08 Jan 2019 10:50 AM

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 15: இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை

அது அவசியமான சந்தேகமா, வேண்டாத சிந்தனையா எனத் தெரியாது.  நாங்கள் குடும்பத்துடன் 20 நாட்கள் வெளிநாடு செல்லத் தீர்மானித்தபோது அந்தக் கேள்வி எழுந்தது. 

 “விமான விபத்து போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் நான், என் மனைவி, இரு மகன்கள் ஆகியோர் அந்தப் பயணத்தின்போது  இறந்து விட்டால்...?’’

பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசாவுக்கான ஏற்பாடு, உடையை எடுத்து வைப்பது போன்றவற்றைச் செய்துகொண்டிருக்கும்போதே மேற்படிக் கேள்வி அவ்வப்போது தோன்றியது. “அதனால் என்ன?  என்றோ ஒருநாள் போக வேண்டிய உயிர்தானே. தவிர குடும்பமாக இறந்தால், ஒருவர் இழப்பால் மற்றவருக்கு ஏற்படும் அதிர்ச்சியெல்லாம் கிடையாதே” என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஆனால், வாயை மூடிக்கொண்டிருக்காமல் இதை என் மனைவியிடம் கூறிவிட்டேன்.  அவள் வேறொரு கோணத்தில் யோசித்தாள். “அப்படியானால் நமக்குப் பிறகு நம் சேமிப்பெல்லாம் யாருக்குச் செல்லும்?”.

சட்டப்படியான இதன் விளைவுகளை யோசிக்கும்போது சமபங்கு சில உறவினர்களுக்குச் செல்வது எங்களுக்கு அப்போது உவப்பானதாக இல்லை.  தவிர உறவு அல்லாத சில நெருங்கிய குடும்ப நட்புகளுக்கும் எங்கள் சேமிப்பின் ஒரு பகுதி செல்ல வேண்டும் என நினைத்தோம்.

கிளம்புவதற்கு முன் சுமார் இரண்டு பக்கங்களுக்கு, “அந்தப் பயணத்தில் நாங்கள் இறந்துவிட்டால், எங்கள் சேமிப்புகள் யார் யாரை எந்த அளவு அடைய வேண்டும்?” என்று பட்டியலிட்டு அதை இரண்டு உறைகளில் சீல் வைத்து நம்பகமான இருவரிடம் கொடுத்தோம்.

இந்த வழிமுறையால் நமக்குப் பின் நம் உறவினர்களிடையே குழப்பமோ தகராறோ வரும் வாய்ப்பு மிகவும் குறைகிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கைகள் தேவையா என்பதை நீங்கள்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

குஜராத் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர், “வங்கிகளிலும், பங்கு மார்க்கெட்டிலும் என்னென்ன முதலீடு போன்ற தகவல்களை எல்லாம்  ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன்.  இப்போது அந்த நோட்டுப் புத்தகம், டெபாசிட் ரசீது, ஷேர் சர்ட்டிபிகேட்டுகள் எல்லாமே மண்ணுக்குள் போய்விட்டன.  விவரங்களை எப்படிச் சேகரிக்கப் போகிறேன்!” என்று கதறியது நினைவுக்கு வருகிறது.

இந்த விவரங்களைக் கணினியில் பட்டியலிட்டு உங்களுக்கு நீங்களே மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள். முடிந்தால் ‘கூகுள் டிரை’வில் இந்த விவரங்களை sync செய்துவிடுங்கள்.  மேற்படிப் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x