இது விமான காபி

இது விமான காபி
Updated on
1 min read

விமானத்தில் பறக்க பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை. விமானத்துக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காக எத்தியோப்பியாவில் ஒரு வசதி செய்திருக்கிறார்கள். என்ன வசதி என்று யோசிக்கிறீர்களா? ஒரு விமானத்தையே காபி ஷாப்பாக மாற்றிவிட்டார்கள். இதன் மூலம் விமானத்தில் பறக்க முடியாதவர்களின் ஆசையைத் தீர்த்துவருகிறார்கள்.

அது சரி, இவர்களுக்கு விமானம் எப்படிக் கிடைத்தது? ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஒரு விமான சேவை நிறுவனம்  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடமிருந்த விமானத்தை ஏலமிட்டது. அப்படி ஏலத்தில் விடப்பட்ட விமானத்தைத்தான் காபி ஷாப் கடைக்காரர்கள் வாங்கினார்கள். வாங்கிய உடனேயே விமானத்திலிருந்த இறக்கையைக் கழற்றிவிட்டு, 92 சக்கரங்கள் உடைய ஒரு பிரம்மாண்ட லாரி மூலம் ஓரோமியா என்ற இடத்துக்கு எடுத்துவந்தார்கள்.

அங்குதான் அவர்களது கடை இருக்கிறது. அங்கே வைத்து விமானத்தை காபி ஷாப்போல மாற்றினார்கள். ‘காக்பிட்’ எனப்படும் இடத்தை காபி தயாரிக்கும் இடமாக மாற்றினார்கள். விமானத்துக்குள் இருக்கை, மேஜை, அலங்காரங்கள் செய்து அதை முற்றிலும் மாற்றினார்கள். இங்கே வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு ஏர்ஹோஸ்டஸ் போல உடைகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பார்த்தபோது, அது முழுமையான காபி ஷாப்பாக மாறியிருந்தது.  

விமானத்துக்குள் இருப்பது போன்ற உணர்வுடன் சுடச்சுட காபியும் தரும் இந்த விமான காபி ஷாப் எத்தியோப் பியாவில் இப்போது பெரும் புகழ்பெற்றுவிட்டது. விமானப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த காபி ஷாப்பைத் தேடிவருகிறார்களாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in