சின்ன மாற்றம் பெரிய தீர்வு 16: அதிர்ச்சியைச் சொல்லும் அனுபவப் பாடம்
மது அருந்திவிட்டு வேகமாக காரில் சென்ற ஒரு நடிகரை காவல்துறையினர் பிடித்ததும், அந்த நடிகர் “யாரும் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டாதீர்கள், குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாக வண்டியைச் செலுத்தாதீர்கள்” என்று பின்னர் பிரச்சாரம் செய்தாராம். இதைப் படித்ததும் லேசான எரிச்சலும் அலட்சியமும் உண்டானது.
ஆனால், தொழிற்சாலையில் பணிபுரியும் என் நண்பரின் தம்பி ஒரு விஷயம் கூறியதைக் கேட்டதும் என் மனம் மாறிவிட்டது.
“எங்கள் தொழிற்சாலையில் அடிக்கடி சிறிய விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பல தொழிலாளர்களும் உரிய பாதுகாப்புக் கவசங்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளாததுதான் முக்கியக் காரணம். நிர்வாகம் அறிவிப்புப் பலகையில் இதுகுறித்துப் பலமுறை எச்சரித்தும் பயனில்லை. அப்போதுதான் தோழர் ஒருவர் ஓர் ஆலோசனையைக் கூறினார்.
அதன்பிறகு எந்த விபத்து ஏற்பட்டாலும், அது மிகப் பெரிய விபத்தாக இருந்தாலொழிய, உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே அறிவிப்பும் செய்யப்படும். விபத்து நடந்த இடத்தில் எல்லாத் தொழிலாளிகளும் கூட வேண்டும். முதலுதவி அளிக்கப்பட்டவுடன் அந்தத் தொழிலாளி எதனால் இந்த விபத்து ஏற்பட்டது; தனது எந்த கவனக் குறைவு இதற்குக் காரணம்; இதனால் அவர் வாழ்க்கையில் நேர இருக்கும் மாறுதல்களையும் கூற வேண்டும்.
ரத்தம், பாதிக்கப்பட்டவரின் முகத்தில் வெளிப்படும் வலி, தட்டுத்தடுமாறி உரத்த குரலில் அவர் பேசுவது, இதற்காக எத்தனை நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தினருக்கு இதனால் ஏற்படக்கூடிய கூடுதல் பொறுப்புகள், வீட்டில் ஏதாவது விசேஷம் நெருங்கியிருந்தால் அவர் முழுவதுமாகப் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை என்று ஒவ்வொன்றாக அவர் குறிப்பிடும்போது அந்தப் பாதிப்புகள் பிற தொழிலாளிகளின் மனத்தில் ஆழமாகப் பதிகிறதாம். இதனால் கடந்த சில மாதங்களில் விபத்து சதவீதம் மிகவும் குறைந்துவிட்டது என்று சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கும்போது அதன் தாக்கம் எப்போதும் நிச்சயம் கவனம் பெறும்.
(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்
