Last Updated : 18 Dec, 2018 10:55 AM

 

Published : 18 Dec 2018 10:55 AM
Last Updated : 18 Dec 2018 10:55 AM

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 12: இப்படிப் பேசிக் குழப்பினா எப்படி?

“உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசக் கூடாது" என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.  பொய் பேசக் கூடாது என்பதைத் தாண்டி அதில் வேறொரு அர்த்தமும் இருப்பதாகப் எனக்குப் படுகிறது.

நீங்கள் பேச நினைப்பதை நீங்கள் பேசுகிறீர்களா?  அதுவும் ஒரு கலைதான்.

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய பேச்சுப் போட்டிக்கான நீதிபதிகளில் ஒருவராக இருந்தேன்.  போட்டியில் கலந்துகொண்ட ஒருவர், “காந்தியைப் போல நாம் பொய் பேசக் கூடாது" என்றதும் பலரும் புன்னகைத்தனர். இரண்டு எதிரெதிரான அர்த்தங்கள் கொண்டதாக அந்த வாக்கியம் அமைந்து விட்டது.

"காந்தி பொய் பேசாமல் வாழ்ந்தார்.  அதேபோல நாமும் வாழ வேண்டும்" என்று அவர் தெளிவாகக் கூறி இருக்கலாம்.

நாம் சொல்ல வந்தது வேறு, சொல்வது வேறு என்று ஆகிவிடக்  கூடாது.  “உங்களுக்கு என்மேல் பாசமே கிடையாது இல்லையா?" என்று கேட்கும்போது, “இல்லை" என்று சொன்னால் மனைவி யின் முகம் சுருங்கும்.  ஆனால், அவள் மேற்படி பதிலில் மகிழ்ந் திருக்க வேண்டும் (சந்தேகமாக இருக்கிறதா? "ஆமாம்" என்று கணவன் பதில் கூறி இருந்தால் அதற்கு என்ன பொருள் என்று யோசித்துப் பாருங்கள்).

நாம் பேசும் வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் பொருள் வருகிற மாதிரி அமைத்துக் கொள்ளக் கூடாது.

"என் கடிகாரத்தை அடிக்கடி ரிப்பேர் பார்ப்பவர் இவர்தான்" என்று ஒருவரைச் சுட்டிக்காட்டினால் என்ன பொருள்?  அடிக்கடி பிரச்சினை செய்யும் உங்கள் கடிகாரத்தை அவர் சரிசெய்து தருகிறார்.  இதைத்தான் நீங்கள் சரியாகக் குறிப்பிட்டிருக் கிறீர்கள்.  ஆனால், பலரும் அவர் உங்கள் கடிகாரத்தைச் சரியாக ரிப்பேர் பார்க்காதவர் என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் தெரிந்திருந்தாலும் சில நேரம் குழப்பமான வாக்கியங்கள் வரத்தான் செய்யும்.  அப்போது என்ன செய்வது?  நீங்கள் அதை உணரவில்லை என்றால்கூட எதிராளியின் முகம் மாறுவதைப் பார்த்து உங்கள் வாக்கியம் அளித்திருக்கக்கூடிய ‘வேறொரு பொருளை’ நீங்கள் உணர்வீர் கள்.  அப்போது சட்டென்று குழப்பத்தை நீக்கும் விளக்க வாக்கியத்தைக் கூறிவிடுங்கள்.

ஓவியம்: பாலசுப்பிரமணியன்

(மாற்றம் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x