

தெரிந்த இருவர் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டு, அது கைகலப்பை நோக்கிப் பயணிக்கிறது என்றால் என்ன செய்யலாம்?
அவர்களை அணுகி, “ஏன் சண்டை போடறீங்க?” என்று தொடங்கி அந்தப் ‘பிரச்சினையின் வே’ரைக் கண்டறிவது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது. இருவருக்குப் பதில் மூவர் கைகலப்பில் ஈடுபடும் சூழல் உருவாகிவிடலாம்.
‘திசை திருப்புதல்’ என்பது சிறந்த தீர்வாக இருக்கும். சிறந்த நகைச்சுவை நிகழ்வு உங்கள் கைவசம் இருக்குமானால் (அப்படி ஒன்றிரண்டை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் பலனளிக்கும்) அதில் ஒன்றை வெளிப்படுத்தலாம். ஒருவர் சிரித்தாலும் நிலைமை சரியாகலாம்.
வேறெதையும்கூடச் செய்ய வேண்டாம். அவர்கள் அருகில் சென்று கைகளைப் பின்புறம் கட்டியபடி அவர்களது வாய்ச் சண்டையைக் கவனிக்கத் தொடங்குங்கள். பொதுவாக, தங்களது சண்டையைப் பிறர் பார்ப்பது பலருக்கும் பிடிக்காது. எனவே, அவர்களில் ஒருவராவது வாயை மூடிக் கொள்ளக்கூடும். இந்த இடத்தில் வேறோர் அனுபவம் நினைவுக்கு வருகிறது.
‘க்ராஸ் டாக்’ என்பது தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் அனுபவித்திருக்கும் பிரச்சினைதான். முக்கியமாக ‘லேண்ட் லைன்’ எனப்படும் அருகிவரும் தொலைபேசியில்.
நானும் என் நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது இப்படித்தான் அந்தப் பிரச்சினை தொடங்கியது. “நீங்க கொஞ்சம் டெலிபோனை வெச்சிடுங்க” என்று நான் கூற, ‘க்ராஸ் டாக்’ குரல்களில் ஒன்று “நீதான் முதல்ல வையேன்” என்றது மரியாதைக் குறைவாக. முகம் தெரியாத எதிரியுடன் எப்படி மோத?
அப்போது எதிர்முனையில் என்னோடு பேசிக்கொண்டிருந்த என் நண்பர், “சார், நீங்க ரெண்டு பேரும் முதல்ல பேசி முடிச்சிடுங்க. அப்புறமா நானும் என் நண்பரும் பேச்சைத் தொடர்கிறோம்” என்றார் அந்த க்ராஸ்டாக்காரரிடம்.
யாருக்குதான் தங்களது பேச்சை சம்பந்தமில்லாத நபர்கள் கேட்பது பிடிக்கும்? “தேவையில்ல. நீங்களே பேசிக்குங்க” என்றபடி தொலைபேசியை வைத்துவிட்டார் அவர். பிறகென்ன? நானும் நண்பரும் பேச்சைத் தொடர்ந்தோம்.
(மாற்றம் வரும்)