Published : 05 Oct 2018 11:35 am

Updated : 05 Oct 2018 11:35 am

 

Published : 05 Oct 2018 11:35 AM
Last Updated : 05 Oct 2018 11:35 AM

காந்தி 150: காந்தியின் அந்த நாட்கள்!

150

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தன் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியைத் தென் ஆப்பிரிக்காவில்தான் கழித்தார். அங்கு ஆங்கிலேயே, டச்சுக் காலனி அரசுகளால் ஒடுக்கப்பட்ட இந்தியர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது அகிம்சை வழியிலான சத்யாகிரகப் போராட்ட வழிமுறையின் சோதனைக் களமாக இந்தப் போராட்டம் அமைந்தது.

 


1891-ல் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார் காந்தி. போதுமான வழக்குகள் அவருக்குக் கிடைக்காததால் அன்றாடப்பாடு திண்டாட்டமாக இருந்தது.

தென் ஆப்பிரிக்காவில் நேடால் என்ற பகுதியில் இந்திய இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட வணிக நிறுவனத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக ஓராண்டு ஒப்பந்தத்தில் 1893 ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் காந்தி. அப்போது அவருக்கு 23 வயது.

 

எதிர்கொண்ட நிறவெறி

 

தென் ஆப்பிரிக்காவில் காலனி ஆட்சி புரிந்துவந்த ஐரோப்பியர்கள், 1860-களில் இந்தியர்கள் பலரைக் கூலித் தொழிலுக்காக அழைத்துசென்றிருந்தனர். அங்கே ஆப்பிரிக்கர்களும் இந்தியர்களும் பல்வேறு நிறவெறிப் பாகுபாடுகளுக்கு உள்ளானார்கள்.

இந்தியர்கள் பலர் குறிப்பிட்ட பகுதிகளில்தான் வாழ வேண்டும் என்ற விதிகள் இருந்தன. அந்தப் பகுதிகளில் குடிசைகளே நிறைந்தி ருந்தன. கூலித் தொழிலாளிகள் அடிமைகள்போல் நடத்தப்பட்டனர். காந்தியும் பல வகைகளில் நிறவெறிப் பாகுபாடுக்கு உள்ளானார். முதல் வகுப்பில் பயணிப்பதற்கான டிக்கெட் வைத்திருந்தும் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் கீழே தள்ளிவிடப்பட்டார்.

தொழிலாளிகளின் வழக்கறிஞர்

ஒரு வழக்கறிஞராக அங்கிருந்த இந்தியக் கூலித் தொழிலாளிகளின் சார்பில் நீதிமன்ற வழக்குகளில் ஆஜரானார். ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து புறப்படும் வேளையில் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணியைத் தொடர வேண்டிக்கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்றார். நீதிமன்றங்களைத் தாண்டியும் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காக ஆங்கிலேயர்களையும் டச்சுக்காரர்களையும் எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அந்தப் போராட்டம் அகிம்சை, சத்யாகிரக வழியில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட முதல் இந்தியர் ஆனார்.

 

சோதனைப் பண்ணை

 

1903 ஜூன் 4 அன்று தென்னாப் பிரிக்கா வாழ் இந்தியர்களின் குரலை ஒலிப்பதற்காக ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற இதழைத் தொடங்கினார். இதுதான் காந்தி தொடங்கிய முதல் பத்திரிகை. தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களும் ஐரோப்பியர்களும் இணைந்து வாழ்வதற்கான ஃபீனிக்ஸ் பண்ணையைத் தொடங்கினார். புலால் மறுப்பு, உண்ணாநிலை, மாற்று விவசாய வழிமுறைகள் போன்றவற்றைக் கடைப்பிடிப்பதற்கான களமாக இந்தப் பண்ணை விளங்கியது. இங்கிருந்த போது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதாக உறுதியேற்றார்.

டச்சு காலனியான டிரான்ஸ்வால் பகுதியில் வசித்த இந்தியர்கள் அனைவரும் தங்கள் விரல் ரேகைகளை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற கோரும் சட்டத்தை எதிர்த்துத் தனது முதல் சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். டிரான்ஸ்வாலிலிருந்து வெளியேற மறுத்ததால், கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். தொடர்ந்து பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களில் கலந்துகொண்டு மேலும் சில முறை சிறைத் தண்டனையை பெற்றார். காந்தியின் மனைவி கஸ்தூர்பாவும் ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

இடையில் சில ஆண்டுகள் இந்தியாவில் தங்கினாலும் தென் ஆப்பிரிக்க வாழ் இந்தியர் களுக்கெதிரான ஒடுக்குமுறைச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட போதெல்லாம் அவர்களுக்காக அங்கே சென்று போராட்டங்களை முன்னெடுத்தார். 1915-ல்தான் நிரந்தரமாக இந்தியா திரும்பினார். இப்படிப் பணி நிமித்தமாக தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தி, அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்குச் சம உரிமை பெற்றுத் தரும் போராட்டங்களுக்காகத் தன் வாழ்வின் 21 ஆண்டுகளை அர்ப்பணித்தார். அதனால்தான் தென் ஆப்பிரிக்காவின் பல இடங்களில் காந்திக்குச் சிலை வைத்திருக்கிறார்கள்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x