

கேரளத்தை மிக மோசமாகப் பாதித்த வெள்ளப் பாதிப்பு சற்றே தணிந்துள்ளது. முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பிவருகிறார்கள். இந்த மக்களுக்கான நிவாரணப் பணியில் இளைஞர் குழுக்களின் பங்கு மகத்தானது. அந்த மாதிரியான இளைஞர் குழுக்களில் ஒன்று ‘கேரளம் காப்போம்’. இவர்கள் மேற்கொண்ட பணி, பேரிடர் நிவாரணத்துக்கு முன்னுதாரணம்.
‘கேரளம் காப்போம்’ அமைப்பை முன்னெடுத்த எழுத்தாளர் ஆன்மன், தனது வியாபாரம் தொடர்பாக கோத்தகிரி சென்றபோதுதான் வாய்வழிச் செய்தியாகக் கேரள வெள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்.
உடனடியாக மோசமாகப் பாதிக்கப்பட்ட கேரளத்தின் வயநாடு மாவட்டத்துக்குச் சென்று வெள்ளப் பாதிப்பை நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்தினார். வயநாடு மாவட்டத்தின் பெரிய நிவாரண முகாமான முண்டேறிக்குச் சென்று மக்களிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார். முகாம் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிறகு இது குறித்து ஃபேஸ்புக்கில் சாதாரணமாகப் பகிர்ந்துள்ளார். ஆனால், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உதவப் பலரும் முன்வந்தனர். நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, இந்தப் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார் அவர். பிறகு இந்த முயற்சியில் சிறார் எழுத்தாளர் இனியன், கவிஞர் ஒடியன் லட்சுமணன் ஆகியோரும் இணைந்தனர். இதன் பிறகுதான் ‘கேரளம் காப்போம்’ உதயமானது.
முதலில் பொருட்களைப் பெறுவதற்கான மையங்களைக் கண்டறியும் முயற்சியில்தான் அவர்கள் களமிறங்கினர். முதல் மையமாக கோத்தகிரியில் உள்ள ‘நம் சந்தை’ உருவானது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வழியாக கோத்தகிரியின் இந்த மையத்தில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தனர். பார்சல் சர்வீஸ் அனுப்ப முடியாதவர்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை வாங்க தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் தன்னார்வலர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம் கோத்தகிரி மையத்தில் கொண்டுவந்து சேர்த்தனர்.
பகுத்தறிந்து செய்த உதவி
நிவாரணப் பொருட்கள் என்றால் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள். ஆடைகள், போர்வை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களைத்தான் அனுப்பிவைப்போம். ஆனால், இது மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் தேவை அல்ல. மேலும் அரிசியையும் பருப்பையும் ஒரே முகாமுக்குக் கொண்டு சேர்ப்பது முறையான நிவாரணப் பணியும் அல்ல. அதனால், முதலில் அவர்களின் தேவை என்ன என்பதை அறிவது அவசியமானது. முதலில் ‘கேரளம் காப்போம்’ நண்பர்கள் அதைச் செய்தார்கள்.
வயநாடு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முகாம்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் தேவையைக் கேட்டறிந்தனர். ஒவ்வொரு முகாமின் தேவைகளை அட்டவணைப்படுத்தி உடனடியாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். அந்தப் பொருட்களை ஒரு மையத்தில் ஒருங்கிணத்து, அந்தந்த முகாமுக்கு அனுப்பிவைத்தனர்.
அதுபோல பொருட்கள் அனுப்பிய இடத்திலிருந்து மக்களுக்கு அளிப்பதுவரையிலான ஒளிப்படங்களையும் இவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவந்தனர். கொடையாளர்கள் தாங்கள் செய்த உதவி தகுதியானவர்களை அடைவதைக் காண்பது அவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும் என்பதால் இந்த ஏற்பாடு.
குறிப்பிட்ட பொருட்கள்தாம் அனுப்புவோம், பெறுவோம் என அவர்கள் வரையறை வைத்திருக்கவில்லை. ஒரு முகாமில் சிறுமி ஒருத்தி ‘கோழி இறைச்சி சாப்பிடணும்போல இருக்கு’ எனச் சொல்லியுள்ளார். அவளுக்காகக் கோழி இறைச்சி பெறப்பட்டு தரப்பட்டது. இன்னொரு முகாமில் குழந்தைகள் பொம்மைகள் கேட்டுள்ளனர்.
அவை கொடையாளர்கள் மூலம் தருவிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. சில முகாம்களில் மருத்துவர்களின் தேவை இருந்துள்ளது. அதையும் நிறைவேற்றியுள்ளனர். இப்போது முகாம்களிலிருந்து வீடு திரும்பியிருக்கும் மக்களுக்கு வீட்டைச் செப்பனிடும் பணிக்கு உதவும் திட்டத்தையும் இந்த இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்தத் திட்டமிட்ட செயல் திட்டத்தால் ரூ. 2 கோடிக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை இந்த நண்பர்கள் குழு அளித்துள்ளது. இது அண்டை மாநில அரசு நிர்வாகம் செய்வதைப் போன்ற அரிய பணி. மேலும் இந்தத் செயல் திட்டத்தின் மூலம் நிவாரணப் பாணிக்கான பாடத்தையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.தவபுதல்வன், இனியன், ஆன்மன், விஜயராஜ் சோழன் நிவாரணப் பணியில் தோள்கொடுத்தபோது...முதலில் பொருட்களைப் பெறுவதற்கான மையங்களைக் கண்டறியும் முயற்சியில்தான்
களமிறங்கினர். முதல் மையமாக கோத்தகிரியில் உள்ள ‘நம் சந்தை’ உருவானது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வழியாக கோத்தகிரியின் இந்த மையத்துக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்தனர்.