

பழநி: ஒட்டன்சத்திரம் பகுதியில் மருத்துவ குணமுள்ள செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தும்பிச்சிப் பாளையம், அம்பிளிக்கை, இடையகோட்டை, பொருளூர் உள்ளிட்ட பகுதிகளில் செங்காந்தள் மலர் எனும் கண்வலி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. செங்காந்தள் மலர் மாநில அரசின் மலராகவும் உள்ளது.
இதன் கிழங்கு பல்வேறு மருத்துவ குணம் கொண்டதால், மருத்துவப் பயன்பாட்டுக்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, பொருளூரு, கள்ளிமந்தையம் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கண்வலி கிழங்கு செடியில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இவற்றை அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது ஒரு கிலோ கண்வலி கிழங்கு விதை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனையாவதால், ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயிகள் ஆர்வமுடன் கண்வலி கிழங்கை பயிரிட்டுள்ளனர். அவற்றில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முன்கூட்டியே நடவு செய்த பகுதிகளில் தற்போது கண்வலி கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது.
அறுவடை நேரத்தில் ஒரு கிலோ ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விற்பனையாகும். கண்வலி கிழங்குக்கு நிலையான விலை இல்லாததால், நுகர்வைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
பாரம்பரியமாக தொடர்ந்து கண்வலி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் நெல், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்வது போல், கண்வலி கிழங்கையும் நேரடியாக கொள்முதல் செய்து மருந்து தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கும் என்றனர்.