

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆய்வு படிப்புக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் 100 பேர் இன்று உடல் தான ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி, பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட மூத்த ஊழியர்கள் 60 பேர், பெண்கள் 15 பேர், இளைஞர்கள் 25 பேர் என மொத்தம் 100 பேர் உடல் தானம் செய்யக்கூடிய சட்ட ரீதியான ஒப்புதல் படிவங்களை கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண ப்ரியாவிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை கண் மருத்துவர் நிர்மல் குமார் கண் தானம் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்மநாபன், மாநிலக் குழு உறுப்பினர் ராதிகா, டாக்டர்.நேருபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அஜய்குமார், ஆறுச்சாமி, சுரேஷ், ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட உடல் தானம் செய்ய முன் வந்த 100 பேரும் பங்கேற்றனர்.