Published : 17 Oct 2025 03:56 AM
Last Updated : 17 Oct 2025 03:56 AM
புதுடெல்லி: “கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு 19 வயதுள்ள ஒருவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையாக 4-வது நிலைக்கு சென்றுள்ளது. மருத்துவர்கள் கீமோதெரபி உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளித்துள்ளனர். எனினும், புற்றுநோய் முற்றியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்வதே சிரமம் என்று கைவிரித்துள்ளனர். இதுகுறித்து தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர், ‘r/TwentiesIndia subreddit’ என்ற சமூக வலைதளத்தில் தன்னுடைய வலி, கனவுகள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விரைவில் தீபாவளி வருகிறது. தெருக்கள் ஏற்கெனவே விளக்குகளால் ஜொலிக்கின்றன. அவற்றை நான் கடைசி முறையாக பார்க்கிறேன் என்பதை நினைக்கும்போது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த பண்டிகை கால விளக்குகள், சந்தோஷம், சிரிப்பு, சத்தம் என எல்லாவற்றையும் இழக்க போகிறேன்.
நான் சத்தமில்லாமல் சிறிது சிறிதாக சரிந்து கொண்டிருக்கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்திரமாக உள்ளது. அடுத்த ஆண்டு என்னுடைய இடத்தில் வேறு யாரோ ஒருவர் விளக்கு ஏற்றுவார். நான் வெறும் நினைவாக மட்டுமே இருப்பேன்.
எனக்கு சுற்றுலா செல்வது பிடிக்கும். தனியாக நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அதனால் அந்த எண்ணங்கள் மங்கிவிடுகின்றன. நான் வீட்டில்தான் இருக்கிறேன். எனது பெற்றோரின் முகத்தில் சோகத்தைப் பார்க்கிறேன். இவற்றை எல்லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கிறதோ தெரியாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்லிவிட்டு செல்வதற்காக இருக்கலாம்.
இவ்வாறு அந்த இளைஞர் கூறிவிட்டு கடைசியாக, “அதிசயம் நடந்தால்...” என்று பதிவிட்டுள்ளார். அதை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து வேதனை அடைந்துள்ளனர். ஏராளமானோர் அவருக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். பலர் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். பலர் அற்புதம் நடக்கட்டும் என்று வாழ்த்தி உள்ளனர். “தைரியமாக இருங்கள் நண்பா. இசை கேளுங்கள். காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். பிடித்த உண்வை உட்கொள்ளுங்கள். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.
நீங்கள் மிகவும் தைரியமான இளைஞர்… என்றெல்லாம் உற்சாகமூட்டும் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT