

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2013ம் ஆண்டு முதல், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதன் ‘காக்லியர்’ பொருத்துதல் திட்டத்தின் மூலம் இளம் குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் பேச்சையும் மீட்டெடுப்பதில் முன்னணியில் உள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. தோராயமாக 7 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சை 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. குழந்தை பருவம் என்பது செவிப்புலன் மற்றும் பேச்சு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான கால கட்டமாகும். ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்வதன் மூலம், குறைபாடு கொண்ட குழந்தைகள் இயல்பாக பேச்சு மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், முக்கியமாக கல்வி மற்றும் சமூகத்தில் தடையின்றி ஒருங்கிணைக்கவும் சிறந்த வாய்ப்பு பெறுவதை உறுதி செய்கிறோம்” என்று தனது அறிக்கையில் டீன் குறிப்பிட்டுள்ளார்.