Published : 10 Aug 2018 10:15 am

Updated : 10 Aug 2018 10:16 am

 

Published : 10 Aug 2018 10:15 AM
Last Updated : 10 Aug 2018 10:16 AM

உலகக் கோப்பை நாயகர்கள்: லுகாகு - பந்தால் வறுமையை விரட்டியவன்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறிய பெல்ஜியம் அணியின் நட்சத்திரம் ஆப்பிரிக்க வம்சாவளி வீரர் ரொமேலு லுகாகு. இன்றைக்கு பெல்ஜியம் வீரராக லுகாகு ஜொலித்துக்கொண்டிருப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தது எது தெரியுமா? வறுமை, சிறு வயதில் அவர் அனுபவித்த கடும் வறுமைதான் காரணம்.

“எப்போது பந்தை உதைத்தாலும் அது கிழிந்துவிடுவதுபோல முழு வேகத்துடன்தான் உதைப்பேன். எப்போதுமே கால்பந்தை மிகுந்த கோபத்துடன் நான் விளையாடியதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எங்கள் வீட்டில் எப்போதுமே எலிகள் ஓடிக்கொண்டிருந்தன; பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளறக்கூடிய 2002 உலகக் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க முடியாமல் போனது; சிறு வயதுக் கால்பந்துப் போட்டிகளில் மற்ற குழந்தைகளின் பெற்றோர் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.


நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு இறுதிப் போட்டிதான். பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியபோதும், பள்ளியில் விளையாடியபோதும் அதுவே எனக்கு இறுதிப் போட்டி" - நடந்து முடிந்த உலகக் கோப்பையின்போது தன் இளமைக் காலம் குறித்து, லுகாகு ஒரு கட்டுரை எழுதினார். அதன்பிறகு அதிகம் பேசப்பட்ட கதையாக லுகாகுவின் வாழ்க்கை மாறியது.

அகதிக் குடும்பம்

காங்கோலீஸ் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த லுகாகு, பெல்ஜியத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஆண்ட்வெர்ப்பின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். கால்பந்து விளையாட்டில் தான் ஒரு வெற்றிகரமான வீரராக வேண்டும் என்ற தீர்மானம், இளம் வயதில் வறுமையில் வாடியபோது அவர் எடுத்ததே. உலகக் கோப்பை எனும் கவர்ச்சிகரமான பெரும் கொண்டாட்டத்துக்கு முற்றிலும் நகை முரணான ஒரு சூழல்தான் அவருடைய வாழ்க்கையாக இருந்தது.

லுகாகுவின் அப்பா ரோஜரும் ஒரு தொழில்முறை கால்பந்து வீரர்தான். 1999-ல் அவர் ஓய்வுபெற்றபோது லுகாகுவுக்கு ஆறு வயது. அதன்பிறகு அவருடைய குடும்பம் வருமானம் இன்றித் தவித்தது, வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியது.

குளிர் நிறைந்த ஐரோப்பிய நாட்டில் சுடுநீரில் அவர்களால் குளிக்க முடியாது. அடுப்பில் சுட வைக்கப்பட்ட நீரை, சிறு குவளையால் எடுத்துத் தலையில் தெளித்துக்கொள்ளவே முடியும். தன் பிரார்த்தனைகளை பல நேரம் இருட்டறைகளிலேயே முடித்துக்கொண்டுள்ளார். மின்கட்டணம் செலுத்தப் பணம் இல்லாததே காரணம். அவர்கள் ஏழையாக மட்டும் இருக்கவில்லை, கையில் காசில்லாமலும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

பால் உணர்த்திய வறுமை

எந்த விளையாட்டு வீரரும் சிறு வயதில் இருந்தே ஊட்டச்சத்துமிக்க உணவை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். "தினசரி பிரெட்டும் பாலும் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. சில நாட்கள் அதுவும் கிடைக்காது. திங்கள்கிழமை கடனுக்கு வாங்கும் பிரெட்டுக்கு, வெள்ளிக்கிழமைதான் காசு கொடுப்போம்.

ஒரு நாள் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அதில் அளவுக்கு மீறி என் அம்மா தண்ணீரைக் கலந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போதுதான் நாங்கள் உழன்றுகொண்டிருந்த வறுமையை என்னால் நேரடியாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். தொழில்முறை கால்பந்து மட்டுமே வறுமையிலிருந்து என் குடும்பத்தைக் காக்கும் என்று அப்போது முடிவுசெய்தேன்" என்று லுகாகு குறிப்பிட்டுள்ளார்.

16 வயதும் ரூ. 600 கோடியும்

தொழில்முறைக் கால்பந்துக் குழுவில் 16 வயதில் சேருவேன். அதன் பிறகு நம் துன்பங்கள் அகன்றுவிடும் என்று தன் குடும்பத்தினருக்கு லுகாகு உத்தரவாதம் அளித்திருந்தார். அதேபோல லுகாகுவின் 12 வயதில் அவருடைய தாத்தா இறந்தபோது, 'அம்மாவை நான் பார்த்துக் கொள்வேன்' என்று தாத்தாவுக்கு லுகாகு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

தொழில்முறை கால்பந்துக் குழுவில் சேருவேன் என்று லுகாகு சொல்லியிருந்தார் இல்லையா, சொன்னபடியே 16 வயதில் ஆண்டர்லெக்ட் கிளப்பில் அவர் சேர்ந்தார். என்ன ஒன்று 16 வயதுடன் கூடுதலாக 11 நாட்கள் ஆகியிருந்தன, அவ்வளவுதான். அதற்குப் பிறகு செல்சியா, வெஸ்ட் புரோம்விச், அல்பியான், எவர்டன் ஆகிய கிளப்களில் விளையாடிய பிறகு, கடந்த ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 600 கோடி ரூபாய்க்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெல்ஜியம் தேசிய அணிக்காக 75 கோல்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

அதிரடிதான் முகவரி

“வாழ்க்கை ரொம்பக் குறுகியது. அதில் மன அழுத்தத்தையும் நாடகத்தன்மையையும் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. பெல்ஜியம் அணி குறித்தும், என்னைக் குறித்தும் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். விளையாடுவது மட்டும்தான் என் நோக்கம்." - இந்த உலகக் கோப்பை தொடங்கிய நேரத்தில் லுகாகுவின் தீர்மானம் இதுவாகத்தான் இருந்தது.

சொன்னதுபோலவே, இந்த முறையும் லுகாகு அதிரடியாக ஆடத் தொடங்கினார். உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து நான்கு கோல்களை அடித்தார். 1986-ல் அர்ஜென்டினா கால்பந்து சாதனையாளர் டீகோ மரடோனா உலகக் கோப்பையில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் கோல் அடித்த பிறகு இதுவே சாதனை. அத்துடன் பெல்ஜியம் அணி அரையிறுதிவரை முன்னேறியது.

தாத்தாவுக்கு ஃபோன்

எனது தொழில்முறை கால்பந்துக் கனவு நனவானதையும் அம்மாவை இப்போது நான் பார்த்துக்கொள்வதையும் பார்க்க என் தாத்தா இன்றைக்கு இல்லை என்பது மட்டும்தான் என்னுடைய கவலை. இதையெல்லாம் ஒரு ஃபோன் செய்து அவரிடம் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும்:

“தாத்தா உங்களிடம் நான் சொல்லியிருந்தேன் இல்லையா. உங்கள் மகளை நான் பார்த்துக்கொள்வேன் என்று. சொன்னதுபோலவே இப்போது நான்தான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது நம் வீட்டில் எலிகள் ஓடிக்கொண்டிருக்கவில்லை. வெறும் தரையில் படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் இல்லை. மன அழுத்தம் இல்லை. நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம் தாத்தா" என்று சொல்ல வேண்டும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x