

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள பூளவாடியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்ட கலைஞரான இவர், நடிகர் ரஜினியின் தீவிரமான ரசிகர். ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியின்போது வேட்டையன், லால்சலாம், ஜெயிலர் விநாயகர் சிலைகளை செய்து அனுப்பி வைத்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு களிமண்ணில் ரஜினி உருவ சிலை செய்து அதனை நடிகர் ரஜினிகாந்துக்கு அனுப்பி வைத்து, அவரது வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘கூலி’ பட ரஜினி கெட்டப்பில் விநாயகர் சிலையை தற்போது வடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளங்களில் பதிவிட்ட வீடியோ, தற்போது வேகமாக பரவி வருகிறது.