

‘பேட்மேன்’ திரைப்படம் உருவாக காரணமாக அமைந்த அருணாசலம் முருகானந்தத்துக்கு இலக்கியத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவை பங்களிப்புகளுக்காக, ‘பேட்மேன்’ என அழைக்கப்படுபவர் அருணாசலம் முருகானந்தம். இவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அக்ஷய் குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற படம் உருவானது. இப்படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் இவரது தாக்கத்தை பேசிய ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிட்டியது.
உலகில் மிகவும் தாக்கம் செலுத்திய 100 பேரில் ஒருவராக அமெரிக்காவின் டைம் பத்திரிகை அருணாசலத்தை தேர்வு செய்தது. மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. விரைவில் ஹாலிவுட்டிலும் இவரது கதையை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீதம் பல்கலைக்கழகம் சார்பில் அருணாசலம் முருகானந்தத்துக்கு இலக்கியத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.