திண்டிவனம் - வன்னிப்பேர் கிராமத்தில் 1,000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் உள்ள வன்னிப்பேர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்ததேவி - விஷ்ணு சிற்பம் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: மூத்ததேவி வன்னிப்பெர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகாமையில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிற்பம் காணப்படுகிறது. தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி மூத்ததேவி அமர்ந்து இருக்கிறாள். வலது கை அபய முத்திரையுடனும், இடது உள்ளங்கை எதையோ பற்றிய நிலையிலும் காணப்படுகின்றன.
இரண்டு பக்கங்களிலும் மாந்தனும், மாந்தியும் காட்டப்பட்டு இருக்கின்றனர். வலது மேல் மூலையில் காக்கை கொடியும், இடது மேல் மூலையில் அவளது ஆயுதமான துடைப்பமும் அமைந்துள்ளன. மூத்ததேவியை துர்க்கை அம்மனாக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதியை துர்க்கை மேடு என அழைக்கின்றனர்.
விஷ்ணு: கிராமத்தின் ஆசனாம்பாறை எனும் இடத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள ஒரு சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தரும் விஷ்ணுவின் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கரம் இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. வலது கரத்தின் பின் பகுதி சேதம் அடைந்துள்ளது. இடது கரத்தில் சங்கு காணப்படுகிறது. மார்பின் குறுக்கே பூணூல் காட்டப்பட்டுள்ளது. ஆடை அலங்காரத்துடனும், அணிகலன்களுடன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரிய ஏரியின் உட்பகுதியில் ஒரு துர்க்கை சிற்பம், இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் காணப்படுகிறது. துர்க்கையின் பின்னணியில் மிகப் பெரிய மான் நின்றிருக்கிறது. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் பல்லவர் காலத்தைச் (கி.பி. 8 - 9-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும்.
கல்வெட்டுகள்: வன்னிப்பேர் கிராமத்தில் பழைய சிவாலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜயவேணுகோபால், “இப்பகுதியில் ஆட்சி செய்த பார்த்திவேந்திரன் எனும் மன்னனின் 4-ம் ஆட்சியாண்டைச் (கி.பி. 910) சேர்ந்தவை.
இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட பல்வேறு தானங்களைக் கல்வெட்டுகள் குறிப்பதாக தெரிவித்துள்ளார். வன்னிப்பேர் கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுச் சிறப்புகளுடன் இருந்துள்ளதை, இங்கிருக்கும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன” என்று அவர் கூறினார். ஆய்வின்போது வன்னிப்பேர் ஆ.மாதவன், கு.ஞானசேகரன், திண்டிவனம் க.கார்த்திக், ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
