Published : 04 Jul 2025 03:04 PM
Last Updated : 04 Jul 2025 03:04 PM
இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காததாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளின் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் கிட்டப் பார்வை குறித்து பொதுவாக யாரும் கண்டு கொள்வதில்லை. கிட்டப் பார்வைதானே என்று அலட்சியமாக நினைக்கிறார்கள். சிலர் கண்ணாடி போட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு சிறு வயதிலேயே ஏற்படும் கிட்டப் பார்வைதான் பிரச்சினைக்குரியது.
இதுகுறித்து ஒய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளர் மு.வீராசாமி கூறியதாவது: சின்னஞ்சிறு வயதில் ஏற்படும் கிட்டப் பார்வை உயர் கிட்டப் பார்வைக்கு (High Myopia) வழி வகுக்கிறது. லென்ஸ் பவர் –6க்கு மேல் -7, -8, -10 என்று அதிகரிக்கும்போது அது உயர் கிட்டப் பார்வை என்று சொல்லப்படுகிறது. உயர் கிட்டப் பார்வைக்கு சென்ற பின் கண்ணில் கடுமையான பக்க விளைவுகளான மாக்குலா சிதைவு, கண்நீர் அழுத்த உயர்வு, விழித்திரை பிரிதல் போன்றவை ஏற்படலாம். இவை அனைத்தும் பார்வையை நிரந்தரமாக பாதிக்கக் கூடியவை என்பதால் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் கிட்டப்பார்வையை தடுப்பதன் மூலமோ அல்லது தள்ளிப் போடுவதன் மூலமோ கடுமையான பார்வை பாதிப்பிலிருந்து தடுத்து, அவர்களின் பார்வையைக் காக்க முடியும். ஏற்கெனவே கிட்டப் பார்வை ஏற்படுவதற்கு, பிள்ளைகளின் கடுமையான கல்விச் சுமை, பிள்ளைகள் தொடர்ந்து அதிக நேரம் அறைக்குள்ளேயே இருப்பது, சூரிய ஒளியில்- வெளிப் புறச்சூழலில் அதிக நேரம் இருக்காதது போன்றவை காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தான் கிட்டப் பார்வை ஏற்படுவதற்கு பிள்ளைகள் இரவு குறைந்த நேரம் தூங்குவதும், சரியான தூக்கமின்மையும் காரணமாக இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள். இரவு - பகல் என்பது இயற்கையின் நியதி. இதை விழிப்பு – தூக்கம் நிலையுடன் ஒப்பிடலாம். அதாவது நாம் தூங்கி இருக்கிற நிலையும், விழித்து இருக்கிற நிலையும் இருட்டு - வெளிச்சம் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. 24 மணி நேரத்தில் இந்த சுழற்சியானது சரியான அளவில் இருக்க வேண்டும்.
நாம் நலமாக இருப்பதற்கு நம் உடலில் இருக்கும் உயிரியல் கடிகாரம் (Biological Clock ) சீராக இயங்க வேண்டும். இரவு பகல் தூங்கி எழுவது உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்து மாறும். இந்த தூக்க - விழிப்பு நிலை நேர மாற்றம் நம் உடலில் இருக்கும் உயிரியல் கடிகாரத்தை பொறுத்து மாறும். தூங்கி இருக்கும் நிலையும் விழித்து இருக்கும் நிலையும் (Sleep / wake cycle) இருட்டு - வெளிச்சம் ( light / dark cycle) இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது. இந்த இருட்டு வெளிச்சம் சுழற்சியில் ஏற்படும் நேர மாற்றம் கண் வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.
உயிரியல் கடிகாரத்தை ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன்தான் கட்டுப்படுத்துகிறது. நம் கண்ணின் விழித்திரையில் இருக்கும் ரெட்டினல் ஹாங்கிலியான் செல்களுக்கும் மெலட்டோனினுக்கும் தொடர்பு இருக்கிறது. தூக்கம்-விழிப்பு நிலை மாற்றம், இருட்டு - வெளிச்ச நிலை மாற்றத்தை ரெட்டினல் ஹாங்கிலியான் செல்லுக்கும், மெலட்டோனினுக்கும் உள்ள தொடர்புடன் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அதிக வெளிச்சத்தில் மெலட்டோனின் குறைவாக சுரந்தும் இருளில் அதிகமாக சுரந்தும் தூக்க – விழிப்பு நிலையை சமன் செய்து நம் உடல் நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த சமன் நிலை பாதிக்கும்படி நாம் நடந்து கொள்கிறோம். குறைவாகச் சுரக்கும் பகலில் தூங்குகிறோம். அதிகமாக சுரக்கும் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கிறோம். இதனால் கண்பார்வை பாதிப்படைவதாக கண்டறிந்துள்ளார்கள். இப்போது புரியும், அன்று பெரியவர்கள் ஏன் இரவில் நேரத்தில் தூங்கி அதிகாலையில் எழுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்று.
ஏற்கெனவே அமெரிக்க தூக்க மருந்து கழகம் 6 - 9 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இரவு 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பொதுவாக பெரியவர்கள் அன்று சொல்வதுண்டு. ‘நல்லா தூங்கி எழுந்திரிச்சா என்ன? இப்படி இரவெல்லாம் கொட்ட கொட்ட விழித்திருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?’ என்று. அன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருந்த தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் உள்ள தொடர்பு இன்று நமக்கு தெரியாமல் போய்விட்டது.
எனவே பிள்ளைகளை குறிப்பாக சிறு குழந்தைகளை இரவு நன்றாக தூங்கச் செய்வோம். இதன் மூலம் கிட்டப் பார்வை ஏற்படாமல் கண்களைக் காக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT