

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட்டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.
“உடலில் கழிவுகள் தங்குவதுதான் நோய்க்கான முதல் காரணம் என்கிறது இயற்கை மருத்துவம். குறிப்பாக, உடலில் சிறுநீர் தங்குவதால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதாவது, நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்பு சிறுநீரகம் (Kidney). சிறுநீரகம் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அவற்றில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியைச் செய்கிறது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நமது ஆற்றலை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. மேலும், நமது உடலில் உண்டாகும் உபாதைகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அண்மைக் காலமாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கல் முதலான பிரச்சினைகள் அதிகம் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினை வராமல் தடுக்க ஆரோக்கிய உணவுமுறை உள்ளிட்ட சுய பராமரிப்பு அவசியம். குறிப்பாக, சிறுநீரகத்தின் செயல்பாடுகளைக் காக்கவல்ல 3 முக்கிய உணவுகள் குறித்து பார்ப்போம்.
பீட்ரூட்: காலையில் பீட்ரூட்டை ‘ஸ்மூத்தி’ மாதிரி செய்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு துருவிய பீட்ரூட்டுடன் பேரிச்சம்பழம் கலந்து கொடுத்து வர, அவர்களின் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பதே ஹீமோகுளோபின் குறைப்பாடுதான். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையக் குறைய சிறுநீரகம் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
இயற்கையாக சிறுநீரகத்தை பராமரிக்க பீட்ரூட் சிறந்த உணவாக உள்ளது. இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், நமது ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. சிலர் பீட்ரூட்டை அப்பிடியே சாப்பிட பிடிக்காது. அவர்கள் சிறிதளவு தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை பீட்ரூட் ஜூஸுடன் கலந்து குடிக்கலாம். அல்லது பெரியவர்கள் துருவிய பீட்ரூட், தேங்காய், நாட்டு சர்க்கரை மற்றும் பேரிச்சம்பழம் கலந்து லட்டு மாதிரியும், சாலட் மாதிரி செய்து சாப்பிடலாம்.
பீட்ரூட்டில் லைக்கோபீன் (lycopene) மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்த லைக்கோபீன் துணைபுரிகிறது. நமது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும், நமது உடலில் கால்சியம் சத்தை தக்கவைக்க பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது.
கேரட்: பீட்ரூட், கேரட் இரண்டையும் கலவையாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கேரட் மிகவும் பிடித்த ஒன்று. கேரட்டில் உள்ள வைட்டமின்-ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதன் மூலம் நோய் வருவதை தடுக்கும் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க கேரட் உதவி செய்கிறது. மேலும், கேரட்டில் ‘கேரோட்டினாய்டு’ (Carotenoids) உள்ளது. இது நமது சருமத்துடன் சிறுநீரகத்தையும் பாதுகாக்கிறது.
கேரட்டையும் சாலட் அல்லது ஸ்மூத்தி மாதிரி செய்து சாப்பிடலாம். இதேபோல் குழந்தைகளுக்கு பீட்ரூட்டை போலவே, கேரட் ஜூஸை தேங்காய் பால், ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். இதனை குழந்தைகள் விரும்பி பருகுவர். இதனுடன் பேரிச்சம்பழம், உலர் திராட்சைகள் மற்றும் நட்ஸை கலந்து கொடுப்பது குழந்தைகள் வளர்ச்சிக்கு மிக அருமையான பானம். இது நமது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது.
கொத்தமல்லி: நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது கொத்த மல்லி. இதனை இயற்கையான உப்பு என்பர். உப்பில்தான் நமக்கு அயோடின் கிடைக்கும். அயோடின் என்பது தைராய்டு பிரச்சினை, உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களுக்கு மிக முக்கியமானது. உப்பு சத்து என்பது உப்பை தவிர இயற்கையாகவே கொத்தமல்லியில்தான் அதிகப்படியாக கிடைக்கும். கொத்தமல்லியில் அயோடின் மட்டுமின்றி பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் குளோரைடு, பாஸ்பரஸ் என எண்ணற்ற சத்துகள் உள்ளன.
எப்படி உட்கொள்வது? - காலையில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியுடன், நான்கு கறிவேப்பிலை மற்றும் இரண்டு புதினா இலையுடன் இஞ்சி அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனை அனைத்து வயதுடையவர்களும் பருகலாம். இது சிறுவர்களுக்கு பசியைத் தூண்ட உதவுகிறது. இந்த பானம், உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக, பலர் சிறுநீர் கழிவு வெளியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு உகந்த பானம் இது.
கொத்தமல்லி சாரை நன்கு குடித்து வர, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி, சிறுநீரகத்தை வலுப்பெற உதவுகிறது. இது மாதிரியான உணவு பழக்கம் மூலம் பிற்காலத்தில் நமது சிறுநீரக பிரச்சினை வருவதை தவிற்க முடியும்.
இந்த உணவு முறைகளைத் தாண்டி, மிக முக்கியமான ஒன்றுதான் தண்ணீர் குடிப்பது. ஆம், நாள் ஒன்றுக்கு மூன்றரை லிட்டர் வரை தண்ணீரை நாம் பொறுமையாக குடிப்பது மிகவும் அவசியமானது. இது நமது சிறுநீரக செயல்பாட்டுக்கு மட்டுமின்றி, உடல் உறுப்புகள் செயல்பட மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தொடர்ச்சியாக குறிப்பிட்ட அளவில் தண்ணீர் குடித்து வர, உடல் முழுமையும் பராமரிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தண்ணீர் குடிப்பது மூலம் நமது சருமத்தையும் பாதுகாக்க முடியும். ஆம், சருமத்தையும் நாம் பராமரிப்பது முக்கியமானது. உடலில் சுரக்கக் கூடிய உப்புடன் கூடிய வியர்வை வெளியேற்றப்பட வேண்டும். அது, வெளியேற்றப்படவில்லை என்றால், அதனாலும், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்கிறார் மருத்துவர் தீபா.