

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று, தனது செலவில் திருமணத்தை நடத்திவைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய பத்திரப் பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்த கண்ணையா- செல்வி தம்பதியின் மூத்த மகள் பாண்டி மீனா, நர்சிங் படித்தவர். 2-வது மகள் பாண்டீஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் சில ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் நிலை குலைந்து போன பாண்டி மீனா, 2022-ம் ஆண்டு தஞ்சாவூர் ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் புகைப்படத்துடன் தனது நிலையை எடுத்துக் கூறி உதவி கேட்டார்.
இதையடுத்து, அவரது நிலையை உணர்ந்துகொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம், தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.1.50 லட்சம், தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.1.50 லட்சம் ஆகிய நிதியுதவி மூலம் பாண்டி மீனாவுக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுத்தார்.
அதன்பிறகு பாண்டி மீனா மற்றும் அவரது சகோதரி பாண்டீஸ்வரி ஆகிய இருவரையும், தனது மகள்களாக பாவித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்துவந்தார். இந்நிலையில், தற்போது பத்திரப் பதிவுத் துறை தலைவராக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பேராவூரணியில் பாண்டி மீனாவுக்கும், அபிமன்யு என்பவருக்கும் தனது சொந்த செலவில் திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்தினார்.
அப்போது, "இவளை என் மகளாகவே நினைத்து வளர்த்தேன், நல்லபடியாக பார்த்துக்கொள்” என மணமகனிடம் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதும், பாண்டி மீனா உட்பட அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். அவரின் மனிதநேய செயலை பலரும் பாராட்டினர். இந்த திருமண விழாவில், தன்னார்வலர்கள், பேராவூரணி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இது குறித்து பாண்டி மீனா கூறியபோது, “என் பெற்றோர் மறைந்த பிறகு என்னையும், என் தங்கையையும் தனது குழந்தைகள் போலவே கவனித்துக்கொண்டார். தஞ்சாவூர் ஆட்சியராக இருந்த போதும், தற்போது பத்திரப் பதிவுத் துறை தலைவராக இருக்கும் போதும், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார்.
குடிசை வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து, புதிய வீடு கட்டிக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து என் திருமணத்தையும் அவரது செலவில் நடத்தி வைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது நம்பிக்கையாக அவர் உள்ளார்” என்றார்.