

பொதுநல மருத்துவர்கள் அவ்வப்போது அறிவுறுத்துவதன் மூலம் தினமும் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நம் மனதில் பதிந்து இருக்கிறது. ஆனால், ‘நாம் தண்ணீர் குடிக்கும் முறை சரியானது தானா?’ என்ற கேள்விக்கு விடை தருகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.
“இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சை முறையும் ஒன்று. இந்த சிகிச்சை முறையில் முதலில் சொல்லக் கூடியது உள்ளுறுப்புகளை சுத்தம் செய்தல் (Internal Cleansing). நாம் தினமும் சரியான முறையில் தண்ணீர் பருகுவது, உள்ளுறுப்புகளை சுத்தம் செய்ய அடிப்படையாக உள்ளது எனலாம். நம் உடலில் 60 சதவீதம் முதலில் 70 சதவீதம் வரையிலான அளவில் நீர்தான் உள்ளது. உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது, பல பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.
சரியான அளவில் தினமும் தண்ணீர் குடிக்கவில்லை எனில், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், கிட்னியில் கல், பித்தப் பையில் கல், இதய பிரச்சினை செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கக் கூடும். எனவே, போதிய அளவில் சரியான முறையில் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
நாம் உணவு உட்கொள்ளும்போது இயன்றவரையில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல், தண்ணீரை வேக வேகமாக குடிக்கக் கூடாது. சிறிதளவு வாயில் வைத்து உமிழ்நீருடன் கலந்து நிதானமாக குடிக்க வேண்டும். அதனை விடுத்து, வேக வேகமாக தண்ணீரை குடித்தால், மனநிலையில் ஒருவித பற்றம் ஏற்படும். தொடர்ந்து பதற்றமான நிலை நீடிப்பதால், செரிமான பிரச்சினையை ஏற்படுத்தி, எல்லா வேலைகளிலும் ஒருவித மன அழுத்தத்தை கொடுத்து, அமைதியின்மையை ஏற்படும்.
அதேபோல், நின்ற நிலையை விட, உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடிப்பதே சாலச் சிறந்தது. வயிற்று பகுதிக்கும், உணவு குழாய்க்கும் இடையில் ஒரு சுருக்கம் இருக்கும். நாம் நின்றுகொண்டு அல்லது வேகமாக தண்ணீர் குடிக்கும்போது, அந்தச் சுருக்கம் விரிந்து நாம் சாப்பிடும் உணவுகளால் எதுக்களிப்பு பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சினையை Reflex Re-Agitation என குறிப்பிடுகின்றனர்.
சாப்பிடவதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பின்னர் 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளி விட்டு பின்னர் தண்ணீர் குடிக்கலாம்.
காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு பதிலாக பலரும் காலையில் காஃபி, டீ குடிப்பதை பழக்கமாக மாற்றியுள்ளனர். இரவு 6 முதல் 8 மணி நேர தூக்க இடைவேளைக்கு பின்னர், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதுதான் சரியானது. காலையில் 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் செயல்படும். அந்நேரத்தில் குடல் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்ற, தண்ணீர் குடிப்பதுதான் மிகச் சிறந்தது.
காஃபி, டீ என்பது நமக்கு ஒருவித அடிமைத் தன்மையை ஏற்படுத்துகிறது. காலையிலேயே காஃபி, டீ குடிக்கும் பழக்கமானது வயிற்றில் பித்த நீரோட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் வயிற்றில் அசிடிட்டி (Acidity) பிரச்சினையும் அதிகரிக்கக் கூடும். முடிந்தவரை காலையில் காஃபி, டீ-க்கு பதிலாக இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது.
அதேபோல், இரவு நேரங்களிலும் தூங்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும். கிட்டத்தட்ட 6 முதல் 8 மணி நேரம் ஓய்வில் இருக்கிறோம். அந்த நேரங்களில், நமது உடலின் பித்தப்பை மற்றும் கல்லீரல் ஆகியவை அதிகப்படியான செயல்பாடுகளில் இருக்கும். குறிப்பாக, இரவு 11 மணி முதல் 3 மணி வரை நல்ல தூக்கம் இருந்தால்தான், நம் உடலில் கழிவுகள் வெளியேற்றும் பணி நடைபெறும். அதற்கு உதவும் வகையில், இரவு தூங்கும் முன்பு தண்ணீர் குடிப்பது அவசியம். இவை ரத்த செல்களில் உள்ள கழிவை வெளியேற்ற துணைபுரியும்.
அதேநேரத்தில், அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், இரவில் சிறுநீர் வெளியேற்றம் காரணமாக தூக்கமின்மையை பிரச்சினை ஏற்படுகிறது. அதிலும், ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரவில் தூங்கும் முன்பு அதிகப்படியான தண்ணீர் குடிப்பது பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால், இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அக்கறையில், சிலர் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் உண்டு. இதுவும் தவறானது. தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிப்பது, நமது உடலில் உள்ள உப்பின் அளவை குறைத்துவிடும். இதனை Hyponatremia என கூறுவர். உடலில் சோடியம் அளவு குறைந்தால், நமது மூளை, கிட்னி செயல்பாட்டில் தொந்தரவு ஏற்படும். இதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகளை உடலில் உப்பின் அளவு குறைவதன் மூலம் சந்திக்க நேரிடும். அதனால், நமது ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்திக்கொள்ள போதுமான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் தீபா.