விழுப்புரம் அருகே 1,300 ஆண்டு பழமையான பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1,300 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியது: “விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் குபேரன் அளித்தத் தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், தென் பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயில் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்ற னர். இந்தச் சிற்பம் வட மொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பமாகும். பல்லவர் காலத்தைச் (கி.பி.7-8-ம் நூற்றாண்டு) சேர்ந்தது. 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
ஜடாபாரம் எனப்படும் உச்சிக் கொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன் மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. காதணிகள், கழுத்தணி, கனத்த மார்புகள், சரிந்த வயிற்றுடன் காட்சியளிக்கிறது. இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. மார்பு கச்சை காட்டப் படவில்லை. தாமரை மொட்டு வலது கரத்தில் ஏந்தியுள்ளது. இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது.
இரண்டு கால்களையும் அகட்டி தொங்கவிட்ட நிலையில் பத்திராசனத்தில் அமர்ந்துள்ளது. மூத்த தேவியின் இரு பக்கங்களிலும், அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் குழந்தை வடிவில் காட்டப்பட்டு ள்ளனர். பொதுவாக மூத்ததேவி சிற்பங்களில் அவளது கொடியான காக்கைக் கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்தச் சிற்பத்தில் வலது, இடது என இரண்டு பக்கங்களிலும் காக்கைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே நன்னாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியூர் திருவாதி மூத்த தேவி சிற்பம் பல்லவர் கலை வரலாற்றுக்கு புதிய வரவாகும்” என்று அவர் கூறினார்.
