8 டன் இறைச்சி, 50,000 பேருக்கு உணவு - ஓசூர் அருகே கோயில் திருவிழாவில் விருந்து!
ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த கரகதம்மாள் தேவி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அசைவ மற்று சைவ விருந்து உபசரிப்பு நடந்தது. இதில் 8 டன் இறைச்சியில் தயாரான உணவு வழங்கப்பட்டது.
ஓசூர் அருகே நல்லூர் கிராமத்தில் உள்ள கரகதம்மாள் தேவி கோயிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. மேலும், கரகம் எடுத்தல், கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, விடிய விடிய பக்தர்கள் அம்மனுக்கு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளைப் பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். இதில், 5 டன் ஆட்டு இறைச்சி மற்றும் 3 டன் கோழி இறைச்சியைச் சேகரித்து அசைவ விருந்துக்கான சமையல் பனி நடந்தது. கர்நாடக மாநிலம் கெங்கேரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர் பங்கேற்று அசைவம் மற்றும் சைவ உணவுகளைத் தயார் செய்தனர்.
மேலும், நேற்று பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. உணவுகள் பரிமாறும் பணியில் 800 பேர் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக ஒரேநேரத்தில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
விருந்தில் களி, மட்டன் பிரியாணி, தலைக்கறி, குடல் கறி, ஆட்டுக்கால் பாயா, வேக வைத்த முட்டை, சாதம், மல்லிகை பூ இட்லி மற்றும் சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி, சாதம், காரக்குழம்பு, தயிர்ச் சாதம் உள்ளிட்ட உணவுகளைப் பரிமாறி மகிழ்ந்தனர். இவ்விருந்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
