Last Updated : 13 Jul, 2018 11:33 AM

 

Published : 13 Jul 2018 11:33 AM
Last Updated : 13 Jul 2018 11:33 AM

ஒரு தொடர்; பல சறுக்கல்கள்!

 

லகக் கோப்பை கால்பந்து சாம்பியன் யார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். ஆனால், இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியிலும் அரங்கேறாத அதிர்ச்சிகளும் மகிழ்ச்சிகளும் இந்த உலகக் கோப்பையில் அரங்கேறியிருக்கின்றன. தென் அமெரிக்க அணி இல்லாத அரை இறுதியை முதன்முறையாக இந்த உலகக் கோப்பைக் கண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்குக் கொஞ்சமும் கணிக்கப்படாத அணிகள் அரையிறுதி சுற்றுவரை முன்னேறியிருக்கின்றன. இந்த உலகக் கோப்பை சொல்லும் சேதி என்ன?

இந்த உலகக் கோப்பையில் அரை இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரேஷியா ஆகிய அணிகள் தகுதி பெற்றன. 1930-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கின்றன. மற்ற இரு அணிகளான பெல்ஜியம், குரேஷியா அணிகள் இறுதிப் போட்டிக்குள் கால்பதித்ததே கிடையாது.

shutterstock_1070022398

இந்த முறையும் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாமல் பெல்ஜியம் வெளியேறிவிட்டது. ஆனால், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரேஷிசியா இறுதிப் போட்டிக்கு முதன் முறையாக முன்னேறி புதிய சாதனையைப் படைத்துள்ளது. அந்த அணியைப் பொறுத்தவரை இது வரலாற்று நிகழ்வு.

எதிர்பாராத திருப்பம்

கால்பந்து பித்துப் பிடித்த தேசங்கள் எனக் கருதப்பட்ட அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில் போன்ற அணிகள் அரையிறுதிக்குக்கூடத் தகுதி பெறாமல், ரஷ்யாவிலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுவிட்டன. முன்னணி அணிகள் இல்லாத இந்த உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வித்தியாசமாகவே இருந்தன. இறுதிப் போட்டியும் அப்படியே இருக்கக்கூடும்.

லீக் சுற்றுப் போட்டிகளில் குரேஷியா, ஐஸ்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் கால்பந்து ஜாம்பவான் எனக் கருதப்பட்ட அர்ஜெண்டினா, தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போனது. மொராக்கோ அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் சந்தித்த சவால்கள், கால்பந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஈரான் அணிக்கு எதிரான போட்டியில், எளிதாக வெற்றிபெற்று விடலாம் எனக் கெத்தாகக் களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் கனவு பொய்த்துப் போனது.

பொதுவாகப் பார்க்கும்போது கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் எனக் கணிக்கப்பட்ட ஜாம்பவான் அணிகள், லீக் போட்டியில் வெற்றி பெறவே நிறையப் போராட வேண்டியிருந்தது. கோல் அடிப்பதற்கு மகத்தான வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதனை அந்த அணிகளால் கோலாக மாற்ற முடியவில்லை. தென் கொரியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஜெர்மனி அணி, போட்டியின் முக்கால்வாசி நேரம் பந்தைத் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், கோல் அடிக்க முடியாமல், அந்த அணியின் தடுப்பாட்டம் வீண் ஆனது. ரஷ்யாவுக்கு எதிராக விளையாடிய ஸ்பெயின் அணிக்கும் இதே கதிதான். ரஷ்யாவின் தடுப்பாட்ட வீரர்களால், ஸ்பெயின் அணியின் கோல் வாய்ப்புகள் முழுமையாகத் தடுக்கப்பட்டன.

அதிர்ச்சி தோல்வி

ஆக்ரோஷம், தடுப்பாட்டம் இரண்டிலும் சிறந்த அணியாகக் கருதப்பட்ட ஜெர்மனி, இந்த உலகக் கோப்பையில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஜெர்மனி வீரர்களின் தடுப்பாட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஜெர்மனியின் நட்சத்திர வீரர் மிராஸ்லவ் குளோஸ், நடுக்கள ஆட்டக்காரர் பாஸ்டியன் இல்லாததால், அந்த அணியின் ஆட்டத்திறன் வெகுவாகக் குறைந்துவிட்டதை இந்த உலகக் கோப்பைத் தொடரில் உணர முடிந்தது. தாமஸ் முல்லர், மரியோ கோம்ஸ் போன்ற நடுக்கள வீரர்களால், கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பது ஜெர்மனி அணியின் பலவீனத்தை அப்பட்டமாக்கியது.

நட்சத்திர வீரர்கள் மீது மட்டுமே ஜாம்பவான் அணிகள் நம்பிக்கை வைத்ததும், இந்த உலகக் கோப்பையில் அவற்றின் சரிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, ஸ்பெயின் அணி இனியெஸ்டாவையும் போர்ச்சுகல் அணி ரொனால்டோவையும் அர்ஜென்டினா அணி மெஸ்ஸியையும் நம்பியிருந்தன. ஆனால், 22 பேர் விளையாடக்கூடிய கால்பந்தில், ஒரே ஒரு நபர் என்ன மாற்றத்தை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு, 2018 உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடர் சிறந்த உதாரணமாகியிருக்கிறது.

தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய ஜாம்பவான் அணிகள், கோல் வாய்ப்புகளை உருவாக்கத் தவறியதும், அவற்றின் சரிவுக்குக் காரணமாகிவிட்டன. ஸ்பெயின் அணி இந்தத் தொடரில் மிக மந்தமான தடுப்பாட்டத்தையே கடை பிடித்தது. தவறுதலாகப் பந்து எதிரணியினருக்குக் கிடைத்த தருணங்களில், ஸ்பெயினின் தடுப்பாட்ட வியூகம் உடைந்ததால், எதிரணிக்குக் கோல் வாய்ப்பு அதிகரித்தது. ஸ்பெயின் வீரர்கள் பயோல், கேஸில்லஸ் ஆகியோரின் ஓய்வு, அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை இந்தத் தொடரில் ஏற்படுத்தியிருக்கிறது.

soccer-1_colrightதிறமையான வியூகங்கள்

போர்ச்சுகல், அர்ஜெண்டினா அணிகளுக்குத் தகுதியான தடுப்பு ஆட்டக்காரர்கள் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. போர்ச்சுகல் அணி பீபீயையும் அர்ஜெண்டினா அணி மஸ்செரனோவையும் மட்டுமே தடுப்பாட்டத்துக்குப் பெரிதும் நம்பியிருந்தன. ஆனால், எதிரணியின் திறமையான வியூகங்களைத் தனிப்பட்ட முறையில் இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

இந்த உலகக் கோப்பையில் குரேஷியா, பெல்ஜியம், ரஷ்யா அணிகள், எதிரணி வீரர்களின் வியூகத்தை முறியடித்து, பந்தைக் கடத்திச் செல்வதில் பாராட்டத்தக்க ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தின. இதன் மூலம் குழுவாக விளையாடினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும் அந்த அணிகள் தெள்ளத் தெளிவாக கால்பந்து உலகுக்குக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. சாம்பியன் அணிகளின் மிகப் பெரிய சொதப்பல்களால் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாம் முறையாக பிரான்ஸ் அணி இறுதிப் போட்டி வரை தன் ஆதிக்கத்தைச் செலுத்தி முன்னேறியிருக்கிறது.

soccer-2_col

52 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் அரையிறுதியில் கோட்டைவிட்டுவிட்டது.1998-ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக அரை இறுதிவரை முன்னேறிய குரேஷியா, முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதகளப்படுத்தியிருக்கிறது. 1986-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பெல்ஜியம் அணி அரையிறுதிவரை முன்னேறி ஆச்சரியப்படுத்தியது. முதன்முறையாக தென் அமெரிக்க அணிகள் எதுவும் அரையிறுதிவரை முன்னேறாமல் போன துரதிர்ஷடமும் இந்த முறை நடந்தேறியது.

ஒட்டுமொத்தமாக ஜாம்பவான் அணிகளுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடர் மிகச் சிறந்த பாடத்தைக் கொடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x