

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளில் 228 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவைத்து, இதுவரை 228 ஏழை குழந்தைகளின் காது கேளாமை பிறவி குறைபாட்டை சீர்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் செய்பட்டுவரும் நிலையில், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள், அறுவை சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் வெளிநோயாளிகள், சுமார் 1.500 உள்நோயாளிகளுக்கு இந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேசமுடியாத குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் என்ற அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை பெற வைக்கும் அதிநவீன அறுவை சிகிச்சை மருத்துவ துறையில் தற்போது மிகவும் பிரபலமானது. இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் கட்டணமாக பெறப்படுகிறது. இவ்வளவு பெரும் தொகையை செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏழை குழந்தைகளுக்கு சாத்தியமில்லாமல் இருந்தது.
மதுரையை சேர்ந்த சுகாதார உரிமை செயற்பாட்டாளர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் அரசு இச்சிகிச்சை வசதியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ள பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர். அதன் அடிப்படையில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2016 ஜனவரி மாதம் 2 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டில் மட்டும் 36 குழந்தைகளுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் 2017-ல் 25, 2018-ல் 32, 2019-ல் 39 என்றும் 2025 பிப்ரவரி மாதம் வரையிலான கடந்த 9 ஆண்டுகளில் 228 ஏழை குழந்தைகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டணம் ஏதும் இல்லாமல் இச்சிகிச்சையின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த விவரங்களை வெரோணிக்கா மேரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இச்சிகிச்சை பெறும் குழந்தைகளின் மனவளர்ச்சி, பெற்றோரின் அர்ப்பணிப்பு, தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களின் பேச்சுப் பயிற்சி ஆகியவற்றைப் பொறுத்து இக்குழந்தைகள் விரைவாக பேசத் தொடங்குவர், என்றனர்.
தமிழக அரசுக்கு ரூ.20 கோடி செலவு:
சுகாதார செயற்பாட்டாளர் வெரோணிக்கா மேரி கூறுகையில், “இந்த சிகிச்சைகளுக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் அரசுக்கு சுமார் ரூ.20 கோடி வரை செலவு ஏற்பட்டுள்ளது. இது தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இலவசமாக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இச்சிகிச்சையை தேனி, சிவகங்கை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதனால் கேதுகேட்பு குறைபாடுள்ள ஏழை குழந்தைகள் அந்தந்த மாவட்டங்களிலேயே இச்சிகிச்சையை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்” என்றார்.