

‘‘கனவு பற்றிய மூளை நரம்பியல் அடிப்படை உண்மைகளை திருக்குறள்களில் திருவள்ளுவர் கூறியிருப்பது, இத்துறை கண்டுபிடிப்புகளுக்கு அவரே மூலம் என்பதை காட்டுகிறது’’ என்று பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் மே மாத சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்ச் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்க அமைச்சர் உதயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், ‘கனவு பற்றி திருக்குறளில்... ஓர் மூளை நரம்பியல் ஆய்வு’ என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் பேசியதாவது:
மூளை நரம்பியல் அறிவியல் உண்மைகள் குறித்து அறியப்படாத அந்த நாட்களிலே, திருக்குறள் அதிகாரம் 122-ல் ‘கனவுநிலை உரைத்தல்’ என்னும் தலைப்பில் திருவள்ளுவர் கூறி இருப்பது விந்தையாகும். கனவுக்கும், நினைவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து வள்ளுவர் கூறியதை, இப்போது மூளை நரம்பியல் ஆய்வுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
மூளை இயக்கத்தின் ஒருவித அதிர்வுகள் காரணமாக மூளையில் பதிந்துள்ள நினைவுக் குறிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவுகள் தோன்றுகின்றன. பெரும்பாலும் தூக்கத்தில் அதிக கண்ணசைவுகள் கொண்ட உறக்கத்தில், மூளையில் லிம்பிக் பகுதி மற்றும் பிரன்ட்டல் பகுதி பாதிப்புகள் இன்றி இருக்கும்போது தெளிவான, வினோதமான கனவுகள் ஏற்படுகின்றன.
தூக்கத்தின் இன்னொரு நிலையான, கண் அசைவற்ற தூக்கத்திலும் கனவுகள் ஏற்படலாம் என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், விலங்குகளும் கனவு காணக்கூடும் என்று அறியப்பட்டுள்ளது. இதை நற்றிணை, வவ்வால் கனவு என விவரிக்கிறது. இத்தகைய கனவு பற்றிய மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படை உண்மைகளை திருக்குறள்களில் திருவள்ளுவர் கூறியிருப்பது, இத்துறை கண்டுபிடிப்புகளுக்கு அவரே மூலம் என்பதை காட்டுகிறது.
காமத்துப்பாலில் கனவுநிலை உரைத்தல் அதிகாரத்தில், கனவில் காதலன் தோன்றுவது, நினைவில் கிடைக்காத இன்பத்தை கனவில் தருவது, கனவுக்கும், நினைவுக்கும் உள்ள தொடர்புகள் போன்ற மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படையுடன் கூடிய உண்மைகளை திருக்குறள் பேசுகிறது. மேலும், கனவுக்கு அதிகாரம் கொடுத்து, 10 குறள்கள் தந்ததுடன், கனவு தொடர்பான வார்த்தைகளை 8 இடங்களில் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
கனவு பற்றி சங்கக்கால இலக்கிய நூல்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை வள்ளுவர் வழியாக மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படை உண்மைகளோடு உணர முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.