Last Updated : 31 May, 2025 01:40 PM

1  

Published : 31 May 2025 01:40 PM
Last Updated : 31 May 2025 01:40 PM

புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!

நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.

புகைப்பழக்கத்தை நிறுத்துவதில் இரண்டு விதக் கட்சியினரைக் காணலாம். ‘ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிட வேண்டும்’ என்று திட்டமிடுவோர் ஒரு கட்சியிலும், ‘படிப்படியாக நிறுத்திக்கொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள் அடுத்த கட்சியிலும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடும் கட்சியில் இருந்தால், மகிழ்ச்சிதான். உங்களால் அப்படி நிறுத்த முடிந்தால், அதற்கு ஆட்சேபனை இல்லைதான். ஆனால், உங்கள் கட்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் பேர்தான்.

இதற்குக் காரணம் உண்டு. ஒரே நாளில் புகைப்பழக்கத்தை நிறுத்தினால், உடலுக்குள் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படும். இதுவரை நாளொன்றுக்கு எத்தனை சிகரெட் / பீடி புகைத்தீர்களோ, எத்தனை வருடங்களுக்குத் தொடர்ச்சியாகப் புகைத்தீர்களோ அவற்றைப் பொறுத்து இந்தத் தொல்லைகள் தொடங்கும்.

முக்கியமாக, தலைவலி அடிக்கடி தொல்லை கொடுக்கும். நெஞ்சில் படபடப்பு ஏற்படும். இரவில் உறக்கம் வராது. எதைப் பார்த்தாலும் எரிச்சல் உண்டாகும். மனச்சோர்வு எட்டிப் பார்க்கும். விரல்கள் நடுங்கும். இப்படிப் பலவிதத் தொந்தரவுகள் அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்போல் தாக்குவதால், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை ஆகிவிடும்.

ஆம், நீங்கள் மறுபடியும் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆகவே, மிகுந்த மன உறுதியுடன், படிப்படியாக, சிகரெட் / பீடிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்து, சீக்கிரத்தில் சிகரெட்டுக்கு மூடுவிழா நடத்திவிடலாம்.

கைகொடுக்கும் ‘5-D’கள்: புகைபிடிக்க வேண்டும் என்னும் உந்துதல் வரும்போது கீழ்க்காணும் ஐந்து D-களைப் பின்பற்றுங்கள்:

முதல் D (Delay): சிகரெட் / பீடி நினைவுக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தாமதப்படுத்துங்கள். இதைத் தினமும் தொடருங்கள். நீங்கள் வழக்கமாகப் புகைக்கும் சிகரெட் / பீடி எண்ணிக்கை சீக்கிரத்தில் குறைந்துவிடும்.

இரண்டாவது D (Deep breathe): ஐந்து நிமிடங்களுக்கு ஆழமாக மூச்சு விடுங்கள். அல்லது பிராணாயாமம் செய்யுங்கள். பிறகு, அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுங்கள்.

மூன்றாவது D (Drink water): சிறிது நேரம் கொஞ்சம் கொஞ்சமாகவும் மெதுவாகவும் தண்ணீர் குடியுங்கள். இப்படி நேரத்தைத் தள்ளுங்கள்; அப்படியே சிகரெட் நினைப்பையும்தான்.

நான்காவது D (Do something else): நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, மாற்று வேலையைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு, அலுவலகத்தில் இருந்தால், உட்கார்ந்தபடி கைகால்களுக்குச் சிறு சிறு பயிற்சிகள் கொடுப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது. வீட்டில் இருந்தால், வீட்டைச் சுத்தம் செய்வது, பொருள்களை ஒழுங்குபடுத்துவது, யோகா, தியானம் செய்வது, பிடித்த இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது.

ஐந்தாவது D (Directory): அதாவது, வழிகாட்டி. புகைபிடிப்பதைக் கைவிட உங்களுக்கு வழிகாட்ட உதவும் தேசிய அழைப்பு எண்: 1800 112 356. இதையும் நாடலாம். இப்படி நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகைப்பதைத் தடுக்கிற அல்லது தள்ளிப்போடுகிற தடுப்பூசியாக அமையும். இது உறுதி.

புகைப்பதை நிறுத்தினால்...

> உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குள், உங்கள் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் குறையும்.

> 12 மணி நேரத்திற்குள், ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

> 2-12 வாரங்களுக்குள், உங்கள் ரத்த ஓட்டம் மேம்படும்; நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

> 1 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு, இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, களைப்பு போன்றவை குறையும்.

> ஒரு வருடத்தில், மாரடைப்புக் கான உங்கள் ஆபத்து பாதியாகக் குறைந்திருக்கும்.

> ஐந்து வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிக்காதவர்களுக்கு உள்ளதுபோல் குறைந்திருக்கும்.

> 10 ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் பாதியாகக் குறைந்து விடும்.

> 15 வருடங்களுக்குப் பிறகு, மாரடைப்புக்கான சாத்தியம் புகை பிடிக்காதவர்களுக்கு இருப்பதைப் போலவே மாறியிருக்கும்.

- பொதுநல மருத்துவர் கு.கணேசன்

| இன்று - மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x