

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ளது வான்வொரி பகுதி. இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஹின் மற்றும் மொசின் காஜி என்ற முஸ்லிம் தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை மாலை நடைபெற்றது. இதன் அருகேயுள்ள திறந்தவெளி புல்வெளி மைதானத்தில் மாலை 7 மணியளவில் நரேந்திரா பாட்டீல், சன்ஸ்குரிதி பாட்டீல் என்ற இந்து ஜோடிக்கு திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அன்று மாலை தீடீரென கனமழை பெய்தது. மூகூர்த்த நேரம் நெருங்கியதால் திறந்தவெளி புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருமண சடங்குகளை நடத்த முடியவில்லை. இதனால் நரேந்திரா மற்றும் சன்ஸ்குரிதி உறவினர்கள், அருகில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய முஸ்லிம் குடும்பத்தினரிடம் உதவி கோரினர். அவர்களும் மகிழ்ச்சியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் மேடையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து அங்கு இந்து முறைப்படியான சடங்குகள் நடைபெற்று நரேந்திரா மற்றும் சன்ஸ்குரிதி தம்பதியினர் தங்கள் திருமணத்தை முடித்தனர். இவர்களது திருமணம் முடிந்ததும், முஸ்லிம் மற்றும் இந்து தம்பதியினர் ஒரே மேடையில் போஸ் கொடுத்தனர். இவர்களது திருமணத்திற்கு வந்திருந்த இந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த விருந்தினர்களும் மகிழ்ச்சியுடன் திருமண விருந்தில் பங்கேற்று மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.