10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கேக் வெட்டி மகனை உற்சாகப்படுத்திய பெற்றோர்

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கேக் வெட்டி மகனை உற்சாகப்படுத்திய பெற்றோர்
Updated on
1 min read

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த மாணவருக்கு அவரது பெற்றோர் கேக் வெட்டி , உற்சாகப்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

க‌ர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கவுதம் நகரை சேர்ந்தவர் அபிஷேக் (15). இவர் அங்குள்ள பசவேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அபிஷேக் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்து 625 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அபிஷேக் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் அவரது பெற்றோர், ஏன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடையவில்லை என‌ திட்டவும் இல்லை. அடித்து துன்புறுத்தவும் இல்லை. மாறாக அபிஷேக்கை பாராட்டி, கேக்கை வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் 625-க்கு 200 மதிப்பெண்கள் மட்டும் பெற்றுள்ளதை எழுதி இருந்தனர். அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் புடைசூழ அபிஷேக் இந்த கேக்கை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து அபிஷேக்கின் தாய் சித்ரா கூறுகையில், ''என் மகனின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். அவன் நன்றாக படித்து தேர்வு எழுதினான். ஆனாலும் தேர்ச்சி அடைய முடியவில்லை. இதனால் அவனை திட்டினால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்கள் அவனை அடித்தால் அவன் தவறான முடிவுக்கு தள்ளப்படுவான். அவனை சந்தோஷப்படுத்தி, அடுத்த முறை நன்றாக தேர்வு எழுதுமாறு கூறினோம். இப்போது கேக் வெட்டி கொண்டாடியதால் அவனும் உற்சாகமாக இருக்கிறான். அடுத்த தேர்வில் அனைத்து பாடங்களிலும் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன் என கூறியுள்ளான்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in