

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் (2024) இறுதி முடிவுகள் ஏப்.22-ல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பலதரப்பட்ட விளிம்பு நிலை நபர்களின் உத்வேகக் கதைகள் அடங்கியுள்ளன. வெறுமனே அவர்கள் இந்தத் தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடுவதில்லை. எத்தனையோ கண்விழித்து படித்த தூங்கா இரவுகள், பெற்றோரின் தியாகங்கள், சாதிக்க வேண்டும் என்கிற தீர்மானம், வீட்டின் வறிய நிலையை மாற்றியாக வேண்டிய கட்டாயம் என பலதரப்பட்ட நிர்பந்தங்களுக்கு மத்தியில் ஓடுபவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு மாணவரின் உத்வேகக் கதை இது...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் எளிதல்ல. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது கனவுகளை நனவாக உழைத்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில், நம்மை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் உத்தரப் பிரதேச மாநிலம் நந்தூர் நகரத்தைச் சேர்ந்த இக்பால் அகமது. 2024 யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 998-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இக்பாலின் தந்தை பெயர் மக்பூல் அகமது. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பெரிய பொருளாதார பின்னனி எல்லாம் கிடையாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மக்பூல் ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வந்தார். வறுமை குடும்பத்தை சோதித்தாலும், எப்படியாது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார்.
அவரது குழந்தைகள் வளர்ந்ததும், மூத்த மகன் சையத் அலி வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனால், மக்பூல் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை மூட வேண்டுய நிலை வந்தது. அதன்பின்னர் அவர் வீட்டிலேயே வேலை செய்து, அதன்மூலம் வரும் சொற்ப பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
அதேநேரத்தில் இக்பால் வீட்டுக்கு இளைய மகன் என்பதால், குடும்பத்தின் வறுமை அவருக்கும் தெரிந்திருந்தது. குடும்பத்தின் கஷ்டத்தை போக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் கல்வி. தனது படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நந்தூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இக்பால் மேற்படிப்புகளுக்காக கோரக்பூருக்கு சென்றார். பின்னர், அவருக்கு கிடைக்கும் சிறு சிறு பணிகளை செய்துகொண்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தாயாராகி வந்திருக்கிறார்.
மேலும், டெல்லிக்கு குடிபெயர்ந்த அவர், தொழிலாளர் நலன் துறையில் (labour department) வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு ஒரு பாதுகாப்பான வேலை இருந்தபோதிலும், யுபிஎஸ்சி தேர்வுக்கும் தாயாகி வந்துள்ளார். தற்போது தனது கனவை இறுகப் பற்றி சாதித்துள்ளார்.
இக்பாலின் தந்தை மக்பூல், தாங்கள் கடந்து வந்த கடினமான காலங்களை நினைவுகூர்ந்தார். “எங்களுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தை பராமரிக்க வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம், ஆனால் எங்கள் பிள்ளைகளை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தான் கூறுவோம்” என்றார் பெருமிதமாக.
இக்பால், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது அவரது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, அவரின் குடும்பத்தினரின் சாதனையாக பார்க்கப்படுகிறது. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், வயதோ, பாலினமோ, குடும்ப சூழலோ தடையில்லை என்பதை இதுபோன்ற உத்வேகக் கதைகள் நமக்கு காட்டுகின்றன.