

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தாஹூ கிராமத்தை சேர்ந்தவர் சீமா குமாரி. இளம் பெண்ணான அவருக்கு தெரிந்தது எல்லாம் கால்பந்து விளையாட்டுதான். அதன் ஊடாக இப்போது ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வரை முன்னேறி சென்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சீமாவின் குடும்பமும் அதில் ஒன்று. அவரது அப்பா நூற்பாலை ஒன்றிலும் வேலை பார்க்கிறார். சீமாவின் குடும்பத்தில் மொத்தம் 19 பேர். எல்லோரும் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சீமாவின் கிராமத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்களது பள்ளிப் படிப்புக்கு முன்கூட்டியே முழுக்கு போட்டு விடுகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் உண்டு.
இது மாதிரியான சூழலில்தான் சீமாவுக்கு 9 வயது (2012) இருக்கும்போது கால்பந்து விளையாட்டு மூலம் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கம் தரும் தன்னார்வ அமைப்பான யுவா அறிமுகமாகிறது. அதில் ஆர்வம் கொண்ட சீமா, கால்பந்து விளையாட பயிற்சி பெறுகிறார். அதே கிராமத்தில் அந்த தன்னார்வ அமைப்பு கட்டிய பள்ளியில் சேர்ந்து பள்ளிக்கல்வியை தொடர்கிறார் சீமா. அங்கிருந்து தேசிய போட்டிகள் மற்றும் சர்வதேச முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகிறார். அதன் மூலம் வாழ்வில் முன்னேறி செல்ல ‘சர்வமும் கால்பந்து மயம்’ என்ற புரிதலை அவர் பெறுகிறார்.
அந்த நம்பிக்கையின் மூலம் 15 வயதில் சரளமாக ஆங்கிலம் கற்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சியாட்டல், கேம்பிரிட்ஜ் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பரிமாற்ற திட்டத்தில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றார். அந்த அனுபவத்தின் மூலம் உயர் கல்வி படித்தால் அது வெளிநாட்டில் தான் என முடிவு செய்கிறார். அப்போது யுவா பள்ளியில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற மேகி, சீமாவுக்கு உதவுகிறார். விண்ணப்பம், கட்டுரை மற்றும் நிதி உதவி போன்றவற்றில் அவரது உதவி சீமாவுக்கு கிடைக்கிறது.
கரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளை அறிவிக்க 100 சதவித கல்வி உதவியுடன் ஹார்வேர்டில் கல்வி படிக்கும் வாய்ப்பை 2021-ல் சீமா பெற்றார். தான் தேர்வு செய்யப்பட்டதை தன்னால் அப்போது நம்ப முடியவில்லை என பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். இப்போது பொருளாதாரத்தில் உயர்கல்வி பயின்று வரும் அவர், தன்னை போலவே தனது கிராமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் உறுதியாக உள்ளார்.
தனது கிராமத்தில் உள்ள வழக்கங்களை உடைத்து, பெண் பிள்ளைகளை நிதி தேவை சார்ந்து சுய முன்னேற்றத்தை காண செய்ய வேண்டுமென்ற நோக்கில் உள்ளார். தனது கிராமத்தில் இருந்த போது பெண் பிள்ளைகளுக்கு கால்பந்து பயிற்சி தருவது போன்ற முயற்சிகளை சீமா செய்துள்ளார். இந்த கல்வி ஆண்டின் இறுதியில் அவர் பட்டம் பெறுகிறார். அவரது உத்வேக வெற்றிக்கதை நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.