

புதுடெல்லி: வேலை முக்கியம்தான், ஆனால், அதைவிட ஆரோக்கியம் மிக முக்கியமானது என உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிஇஓ அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரபல நிறுவனம் ஒன்றின் சிஇஓ அமித் மிஸ்ரா. இவர் தனது லேப்டாப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மூக்கில் ரத்த வடியத் தொடங்கியது. அது நிற்கவே இல்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் பரிசோதித்தபோது 230-ஆக இருந்தது.
மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின் மறுநாள் அவரது ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்தது. அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் முயன்றுவருகின்றனர்.
இந்நிலையில் சிஇஓ மிஸ்ரா சமூக ஊடகம் ஒன்றில் விடுத்துள்ள தகவலில் கூறியதாவது: எனக்கு தலை வலி, தலைசுற்றல், ரத்தம் அழுத்தம் ஆகியவை இருந்ததில்லை. ஆனால், திடீரென மூக்கில் ரத்தம் நிற்காமல் வந்ததால் ஐசியு செல்லும் நிலை ஏற்பட்டது. நமது உடல் எப்போதும் தெளிவான எச்சரிக்கையை வெளிப்படுத்தாது. அதிக ரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் இதர சுகாதார பிரச்சினைகள் சத்தம்மின்றி பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அதனால், உங்கள் உடல்நிலையை அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வது அவசியம். வேலை முக்கியம்தான், ஆனால், ஆரோக்கியம் சமரசமற்றது. நாம் நன்றாக இருக்கிறோம் என்ற எண்ணத்த்தில் சிறு சிறு விஷயங்களை நாம் கண்டு கொள்வதில்லை. அதனால், உங்கள் உடலை கவனியுங்கள், எனக்கு ஏற்பட்டது போன்ற அபாய எச்சரிக்கைக்காக காத்திருக்க வேண்டாம். இவ்வாறு மிஸ்ரா கூறியுள்ளார்.